பரந்தாமன் 
தமிழக செய்திகள்

இது ஒரு நியூ எரா - 100 நாளில் 546 குற்ற சம்பவங்கள்; திமுக பரந்தாமன் குற்றச்சாட்டு

ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் தண்ணீர் திறந்து விட வேண்டுமே, அதைப்பற்றி வாய் திறந்து பேசியிருக்கீங்களா? என்று பரந்தாமன் தெரிவித்தார்.

சென்னை,

100 நாள் அவல ஆட்சியை பற்றி திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் இ.பரந்தாமன் குற்றச்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது:-

மக்களுக்கு நம்பிக்கை இல்லை

100 நாளில் 546 குற்றச்சம்பவங்கள் பச்சிளம் குழந்தை முதல் பாட்டி வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்படுகிறார்கள். கஞ்சா வாங்கினால் மாத்திரை ப்ரீ ஆட்சி இந்த அரசின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை!

சர்க்கஸ் சர்க்கார்

தவெக அரசு பொறுப்பேற்ற போது ‘இட்ஸ் எ பிகினிங் ஆப் ஏ நியூ எரா’ என்று சொன்னார். உண்மைதான், இது ஒரு நியூ எரா—100 நாளில் 546 குற்ற சம்பவங்களை செய்த ஒரு நியூ எரா!. இன்னைக்கு விஜய்யினுடைய சர்க்கஸ் சர்க்கார் ஆட்சியின் சாதனை இது. 'பெண்கள் பாதுகாப்பு ரொம்ப நான் ஸ்ட்ரிக்ட்டா வச்சிருப்பேன்'னு சொன்னார். ஆனால், இன்னைக்கு பெண்களுக்கான பாதுகாப்பு எந்த அளவில் தமிழ்நாட்டில் இருக்கின்றது என நாட்டு மக்களுக்கே நன்றாக தெரியும். தவெக கட்சியில் இருக்கக்கூடிய பெண்களுக்கே பாதுகாப்பு கொடுக்க முடியாத ஒரு பலவீனமான சர்க்காராகத்தான் இது.

சர்க்கஸ் சர்க்கார்

'போதை கலாச்சாரத்திலிருந்து நம்ம பசங்களை மீட்கணும், அவங்களை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கு'னு சொன்னார். ஆனால் போதை பழக்கமும் கடத்தலும் இங்க தீவிரமாக இருக்கிறது. 'இந்த கல்லூரி வளாகத்தில் போதைப்பொருள் கடத்தப்படுகிறது, விற்கப்படுகிறது' என்று காவல்துறைக்கு தகவல் கொடுத்த கோவை கல்லூரி மாணவன் அமுதனுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாத சர்க்கஸ் சர்க்கார் அரசுதான் இந்த விஜய்யின் அரசு.

கொலை பழி

காவல்துறையை கையில் வச்சிருக்கக்கூடிய முதல்-அமைச்சர். 'ஜென்-ஜி' பிள்ளைகள் எல்லாம் உங்களுக்கு ஆர்வமாக வாக்களித்தார்களே, இந்த முதல்-அமைச்சருக்கு, இன்னைக்கு 'ஜென்-ஜி'கள் மட்டும் ஏறத்தாழ 10-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இன்றைக்கு கொல்லப்பட்டிருக்கிறார்கள், இந்த கொலை பழியை முதல்-அமைச்சர் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். இந்த 100 நாளில் பல குற்ற சம்பவங்கள் தமிழ்நாட்டில் நடந்திருக்கு. நான் ஏற்கனவே சொன்னது மாதிரி 546 குற்ற சம்பவங்கள் இருக்கு. இந்த ஒரு வாரத்தில் மட்டும் நடந்த குற்றங்களின் எண்ணிக்கையை எடுத்துக்கிட்டீங்களா?

அமைச்சர் என்ன சொல்றாரு?

கோவையில் போதைப்பொருளைப் பற்றி தகவல் கொடுத்ததாக சொல்லி, அமுதன் என்கிற மாணவனை அடித்து கொன்றுள்ளனர். அந்த மாணவன் போதை பொருள் பற்றி கொடுத்த தகவலை காவல்துறையே போதை கும்பலிடம் கொடுத்துள்ளது. ஆனால் சட்டமன்றத்தில் அமைச்சர் என்ன சொல்றாரு? 'இரு கோஷ்டிகளுக்கு இடையேயான மோதல்'னு சொல்லிட்டு வழக்கின் தன்மையை திசைதிருப்புறார்.

இளைஞர்களுக்கான அரசு

நான் கேட்கிறேன் முதல்-அமைச்சர் அவர்களே, 'இளைஞர்களுக்கான அரசு' என்று நீங்கள் மார்தட்டி கொள்கிறீர்கள். 'இளைஞர்கள் மூலமாகவே ஆட்சிக்கு வந்தேன்' என்று சொல்லுகிற நீங்கள், ஒரு இளைஞன் குற்றம் நடைபெறுகிறது என்று காவல்துறைக்கு சொன்ன ரகசியத்தை காப்பாற்றாத காவல்துறை அப்படிப்பட்ட காவல்துறை வைத்திருக்கும் உங்களுக்கு முதல்-அமைச்சராக இருப்பதற்கு கொஞ்சமாவது தகுதி இருக்கிறதா என்ற கேள்வியைத்தான் உங்களை நோக்கி நான் கேட்கிறேன்.

திமுக மீதுதான் நம்பிக்கை

அமுதனுடைய தாயார் சொல்லுகிறார்கள், 'அரசின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை; எதிர்க்கட்சி தலைவர் அண்ணன் உதயநிதிதான் எங்களுக்கு நீதி பெற்றுத் தர வேண்டும்' என்று சொல்லுகிறார்கள் என்றால், ஆளுகிற அரசின் மீது இந்த நாட்டு மக்களுக்கு நம்பிக்கை இல்லை! எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய திராவிட முன்னேற்ற கழகத்தின் மீதுதான் நம்பிக்கை இருக்கிறது என்பதை இது காட்டுகிறது.

100 நாள் சாதனை

நேற்றைக்கு திருவொற்றியூரில் இரண்டு அமைச்சர்களை (ஆதவ் அர்ஜுனா மற்றும் ராஜ்மோகன்) ஓடவிட்டிருக்கிறார்கள். இந்த 100 நாள் சாதனை என்னவென்று சொன்னால், அமைச்சர்களைத் தலைதெறிக்க ஓட வைத்ததுதான் இந்த 100 நாள் சாதனை! இதே மாதிரி தண்டையார்பேட்டையில் கஞ்சா விற்றதைத் தட்டிக் கேட்ட பையனை அம்மிக்கல்லைத் தூக்கிப் போட்டுக் கொலை செஞ்சிருக்காங்க. திருவெறும்பூரில் இரண்டு தவெக காரங்க ஒருத்தரை வெட்டிக் கொலை பண்ணியிருக்காங்க.

ஒரு வார குற்ற சம்பவங்கள்

விருதுநகரில் ஒரு பள்ளி பொண்ணை துன்புறுத்தியதை தட்டி கேட்ட அப்பாவை வெட்டி கொன்றிருக்காங்க. காஞ்சிபுரத்தில் கோவில் திருவிழாவில் இரண்டு இளைஞர்களை வெட்டி கொன்றிருக்காங்க. திருவனந்தபுரத்தில் 25 வயசு இளைஞரை வெட்டி கண்மாயில் வீசியிருக்காங்க. திருப்பூர்ல காதலை மறுத்த பெண்ணை கொலை செய்ததோடு மட்டுமல்லாமல், அந்த அம்மாவையும் இளைஞர்களையும் கொன்றிருக்காங்க. ஈரோட்டில்பேன்சி ஸ்டோருக்குள் புகுந்து ஒரு பெண்ணை கத்தியால் குத்தியிருக்காங்க. இதெல்லாம் கடந்த ஒரு வாரத்தில் நடந்த குற்றச் சம்பவங்கள்!

எந்த கலாச்சாரத்தை் காட்டுகிறது?

அம்பத்தூர் புதூரில் ஆட்டோவில் ஒரு பெண்ணை உட்கார வச்சு கழுத்தை அறுத்து ரோட்டில் வீசியிருக்காங்க. இந்த மாதிரியான குற்ற சம்பவங்கள் எல்லாம் இதற்கு முன்னாடி நடந்ததே இல்லை. சினிமா படத்தில் வருகிற மாதிரியான கொலை காட்சிகளை அரங்கேற்றி கொண்டிருக்கிறார்கள். கும்மிடிப்பூண்டியில் 17 வயசு இளைஞனை கொன்று கல்லறை மேல போட்டு, சில கொலை சம்பவங்களைச் செய்து ரீல்ஸ் எடுத்து வெளியிடுகிறார்கள்! இதெல்லாம் எந்த கலாச்சாரத்தை காட்டுகிறது?

தவறான முன்னுதாரணம்

ஒரு திரைத்துறையிலிருந்து வந்தவர் தமிழ்நாட்டுக்கு முதல்-அமைச்சர். அதனுடைய விளைவு என்னவென்றால், நீங்கள் திரைப்படத்தில் ஹீரோவாக இருக்கலாம், நடித்த ஹீரோயிசத்தை பார்த்து இன்னைக்குத் தமிழ்நாட்டு இளைஞர்கள் இதை செய்கிறார்கள். தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு நீங்கள் ஒரு தவறான முன்னுதாரணமாக இருக்கிறீர்கள் என்பதைத்தான் இது காட்டுகிறது.

குற்ற சம்பவங்கள் நடக்கிறது

வேலூரில் தலைமை பெண் காவலரையே குத்தி கொன்றிருக்கிறார்கள்! இதைவிட என்ன கேவலம் இருக்கு? வெட்கமாக இல்லை முதல்-அமைச்சருக்கு? காவல்துறையை தன் கையில் வச்சிருக்கக்கூடிய முதல்-அமைச்சர், காவல்துறையிடம் தகவலை கொடுக்கும் பையனை காப்பாற்றுவதற்குமுடியல்லை இந்த காவல்துறைக்கு! ஆனால் எதிர்க்கட்சி தலைவர் கைதின் போது, சாலைகளில் இருக்கக்கூடிய திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய இளைஞரை பார்த்து இரண்டு கையை வைத்து அடிப்பார் சென்னை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ்! எந்த காவல் ஆணையர் ஒரு கைது நடவடிக்கைக்கு ஸ்பாட்டிற்கு வந்திருக்கிறார்கள்? இருக்கிற வேலையை விட்டுவிட்டு வேறு வேலையை நீங்கள் செய்வதனால்தான் இந்த குற்ற சம்பவங்கள் நடக்கிறது.

சட்டம்-ஒழுங்கை காப்பாற்றும் லட்சணமா?

கோயம்புத்தூரில் இதே மாதிரி நகைக்காக ஒரு வயதான பெண்ணை கொன்றிருக்கிறார்கள். இந்த ஆட்சியில் பச்சிளம் குழந்தையிலிருந்து பாட்டி வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்படுகிறார்கள். 'நான் ஆட்சிக்கு வந்தா சட்டம்-ஒழுங்கை காப்பாற்றுவேன்'னு சொன்னாரே, இதான் சட்டம்-ஒழுங்கை காப்பாற்றும் லட்சணமா?

வாய் திறந்திருக்கீங்களா?

நான் ஆட்சிக்கு வந்த பிறகு மக்களுக்கான ஆட்சியை தருவேன்'னு சொன்னீங்களே, மக்களுக்கான பிரச்சனையைப் பற்றி இதுவரைக்கும் எதாவது பேசியிருக்கீங்களா? காவிரி நதி பிரச்சனைக்காக நீங்கள் வாய் திறந்திருக்கீங்களா? கர்நாடகாவில் தமிழர்களை சுட்டுக் கொன்றார்களே, அதற்காக வாய் திறந்து பேசியிருக்கீங்களா? ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் தண்ணீர் திறந்து விட வேண்டுமே, அதைப்பற்றி வாய் திறந்து பேசியிருக்கீங்களா?

பாயும் முதல்-அமைச்சர்

மேகதாது அண கட்டப்படுவதை தடுக்க தனியாக டிரிப்யூனல் அமைக்கப்பட வேண்டும் என்று மத்திய அமைச்சரிடத்தில் போய் கேட்டிருக்கீங்களா? மத்திய அரசிடத்தில் பயப்படுகிறார் முதல்-அமைச்சராகத்தான் இருக்கிறீர்களே தவிர, தமிழ்நாட்டில் சட்டமன்றத்திலும் வெளியிலேயும் மட்டும்தான் பாயும் முதல்-அமைச்சராக காட்டிக்கொள்கிறீர்கள்.

நடந்திருக்கா?

ஆடி மாதம் வந்தால் தள்ளுபடி கொடுப்பார்கள்—ஒரு சட்டை வாங்கினால் ஒரு சட்டை ப்ரீ, ஒரு பேண்ட் வாங்கினால் ஒரு பேண்ட் ப்ரீ, ஒரு ஜாக்கெட் பிட் வாங்கினால் இன்னொன்று ப்ரீ என்று தள்ளுபடி கொடுப்பார்கள். அதுமாதிரி, இந்த கொக்கைன் பவுடர் பயன்படுத்திய சரத் மந்திரியுடைய தொகுதியில் 'கஞ்சா வாங்கினால் மாத்திரை ப்ரீ'! இப்படிப்பட்ட ஆட்சி தமிழ்நாட்டில் இதுவரைக்கும் நடந்திருக்கா? கஞ்சா வாங்கினால் மாத்திரை ப்ரீ என்று விஜய்யின் அரசாங்கமாக நடந்துகொண்டிருக்கிறது!

கவன ஈர்ப்பு தீர்மானம்

சட்டமன்றம் நடந்துகொண்டிருக்கிறது. கவன ஈர்ப்பு தீர்மானத்தைக் கொடுத்திருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர். கோவையில் நடைபெற்ற கொலை சம்பவத்திற்கும், தமிழ்நாட்டில் நடைபெற்று வருகிற பல்வேறு கொலை குற்றங்களுக்கும் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தைக் கொடுத்து, பதில் கொடுக்க வேண்டிய இடத்தில் இருக்கக்கூடிய முதல்-அமைச்சர் இன்னைக்கு சட்டமன்றத்திற்குள் வந்து உட்காரவில்லை!

இது என்ன மாண்பு?

காவல்துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் பேசாமல் ஓடி ஒளிந்துகொண்டிருக்க, சம்பந்தமே இல்லாத அமைச்சர்கள் எல்லாம் எழுந்து எழுந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். இது என்ன மாண்பு? என்ன சட்டமன்ற மரபை நீங்கள் கடைப்பிடிக்கிறீர்கள்?

சிஎம் விஜய் சார் எழுந்து நிற்பாரா?

இதுல லட்சணம் என்னவென்றால், ஒரு அமைச்சர் சொல்கிறார்—'முதல்-அமைச்சர் வரும்போது எழுந்து நிற்க வேண்டும்' என்று. எதிர்க்கட்சி தலைவரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான், முதல்-அமைச்சரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான். அப்ப எதிர்க்கட்சி தலைவர் வரும்போது சிஎம் விஜய் சார் எழுந்து நிற்பாரா? என்ன பேச்சு இது? சட்டமன்றத்தில் பேரவைத் தலைவர் வரும்போது மட்டும்தான் அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நிற்க வேண்டும். பேரவைத் தலைவரைத் தவிர வேறு யாருக்கும் அந்த இடத்தில் எழுந்து நிற்க வேண்டிய அவசியமில்லை!

சட்டம்-ஒழுங்கு

இந்த 100 நாட்களில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரித்திருக்கிறது. விலைவாசி கட்டுக்கடங்காமல் ஏறியிருக்கிறது—அரிசி விலை கிலோவுக்கு ரூ. 30 ஏறியிருக்கிறது, ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது, மின்சாரக் கட்டணம் ஷாக் அடிக்கிறது! மக்களுடைய அன்றாடப் பிரச்சனையைப் பற்றி அரசாங்கத்தில் யாராவது வாய் திறந்து பேசுகிறார்களா? சட்டமன்றத்தில் கேட்கும் கேள்விக்கு அந்தந்தத் துறை மந்திரிகள் யாராவது பதில் சொல்கிறார்களா?

அட்ஜஸ்ட்மென்ட் கலாச்சாரம்

அதேபோல இன்னைக்கு ஒரு பெரிய 'அட்ஜஸ்ட்மென்ட் கலாச்சாரம்'. தவெக கட்சியின் நிர்வாகியான ஒரு பெண்மணி தூத்துக்குடி எஸ்பி அலுவலகத்திற்குப் போய் 'அட்ஜஸ்ட்மென்ட் பண்ணச் சொல்கிறார்கள்' என்று புகார் கொடுக்கிறார். இது மக்களுக்கான ஆட்சியா அல்லது அட்ஜஸ்ட்மென்ட்க்கான ஆட்சியா? எந்தப் பெண்களின் பாதுகாப்பைச் சொல்லி ஆட்சிக்கு வந்தீர்களோ, இன்னைக்கு தினமும் பெண்களின் அலறல் குரல் கேட்டுக்கொண்டே இருக்கிறதே, விஜய் சார் உங்கள் காதில் கேட்கவில்லையா? புடிச்சு வச்ச பிள்ளையார் மாதிரி உட்கார்ந்திருக்கிறீர்களே!

பத்திரிகையாளர்களை அனுமதிக்கவில்லை

இன்னொரு விஷயம்—சட்டமன்றம் நடந்துகொண்டிருக்கும்போது தேவையில்லாமல் முதல்-அமைச்சரோ அமைச்சர்களோ வெளியில் நிகழ்ச்சிகளில் போய் கலந்துகொள்ளக்கூடாது. கவன ஈர்ப்பு தீர்மானத்தின் போது எங்கே போயிருந்தீர்கள் சார்? போன இடத்தில் உங்கள் சாதனையைப் பேசினீர்களா? இல்லையே. முதலீட்டாளர்கள் மாநாட்டில் பத்திரிகையாளர்களை அனுமதித்தீர்களா? ஏனென்றால் குட்டு வெளிப்பட்டுவிடும்! உள்ளே போனால் வந்திருப்பவர்கள் உண்மையான முதலீட்டாளர்களா அல்லது கோட்-சூட் மாட்டி வந்தவர்களா என்பது தெரிந்துவிடும் என்பதால் பத்திரிகையாளர்களை அனுமதிக்கவில்லை!

சாதனையை அல்ல!

சினிமா படத்தில் நடிப்பது போலவே இன்னைக்கு ஆட்சியிலும் நடித்துக்கொண்டிருக்கிறீர்கள். 100 நாளில் சாதித்தது என்ன என்று ஒரு வீடியோ வெளியிடுகிறீர்கள்; அதில் பதவி ஏற்பு விழாவில் பேசிய பேச்சையும் விட்ட டயலாக்குகளையும்தான் காட்டியிருக்கிறீர்களே தவிர, சாதனையை அல்ல! பத்திரிகையாளர்களை சந்தித்து சாதனை எதையாவது சொல்லியிருக்கிறாரா? 100 நாள் ஆச்சே! இது அறிவிக்கப்படாத அவசரநிலை.

பொய் சொல்கிறார்கள்

ரூ. 15,000 கோடி வருவாய் வந்துவிட்டதாக பொய் சொல்கிறார்கள். லீக்கேஜை அடைத்துவிட்டோம் என்று வாயில் வடை சுடுகிறார்களே தவிர, நிஜமாக எந்த ஆதாரமும் நிதிநிலை அறிக்கையில் இல்லை. பாரதிய ஜனதா கட்சியைக் கண்டு அஞ்சிப் பம்பும் 'டம்மி முதலமைச்சராக' விஜய் இருக்கிறார். இந்த 100 நாள் ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து, போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து, தமிழ்நாட்டை நாசமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்! சட்டமன்றத்தில் அந்தந்த கேள்விகளுக்கு அந்தந்த அமைச்சர் பதில் சொல்ல வேண்டும் ஆனால் அது எல்லாம் தெரியாமல் அரவேக்காட்டு அமைச்சராக உள்ளார்கள்.

முதல்-அமைச்சர் விஜய்

நீட் மசோதா பற்றிப் பேசும் தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிப்படை அரசியல் அறிவோ பாராளுமன்ற நடவடிக்கைகளோ தெரியவில்லை. 'மெடிக்கல் கவுன்சில் ஆஃப் இந்தியா' அறிவிப்பை நாடாளுமன்ற மசோதா என்று அரைகுறையாகப் பேசுகிறார்கள். மாநில உரிமைகளை விட்டு கொடுக்க மாட்டோம் என்று சொல்லும் முதல்-அமைச்சர் விஜய், பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனத்தில் UGC பிரதிநிதியை நியமிக்க ஒப்புக்கொண்டது ஏன்? பொம்மை முதல்-அமைச்சராக, டம்மி முதலமைச்சராகத்தான் இவர் இருக்கிறார்.

சர்க்கஸ் சர்க்கார்

இந்த 100 நாள் ஆட்சி மக்களுக்கான 'சர்க்கார்' அல்ல, வெறும் 'சர்க்கஸ் சர்க்கார்'! நாளுக்கு நாள் நாசமாகும் தமிழ்நாடு இது. இந்த 100 நாட்களில் செய்ததெல்லாம் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது. போதை பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. விலைவாசி பிரச்சனை, விவசாயிகள் பிரச்சனை என எதையும் சரிசெய்ய முடியாமல் பல்லிளிக்குது இந்த 100 நாள் ஆட்சி என்று தெரிவித்தார்.