தமிழக செய்திகள்

முதல் தலைமுறை வாக்காளர்கள் அதிகம் இருக்கக்கூடிய தேர்தல் இது - அண்ணாமலை

அண்ணாமலை காரைக்குடி தொகுதியில் அமமுக வேட்பாளர் தேர்போகி பாண்டியை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார்.

காரைக்குடி,

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வருகிற 23-ந்தேதி நடைபெறுகிறது. தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை ஆதரித்து அந்தந்த கட்சி தலைவர்களும், முக்கிய நிர்வாகிகளும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி தொகுதியில் அமமுக வேட்பாளர் தேர்போகி பாண்டியை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

காரைக்குடியில் இரண்டு, மூன்று நாட்களுக்கு முன் ரோடு ஷோ நடந்ததை அனைவரும் பார்த்திருப்போம். அரசியல் என்பது வண்டி மேல் நின்றுகொண்டு கைகாட்டுவது கிடையாது. வெயிலில் மக்களோடு மக்களாக நின்று வாக்கு சேகரிக்க வேண்டும். கர்மவீரர் காமராஜர் தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக ஒன்பது ஆண்டுகள் இருந்தார். ஆனால் எத்தனை பேருக்கு தெரியும் அவர் ஒன்பது ஆண்டுகள் சிறையில் இருந்தார் என்பது, அதனால் இன்றைக்கு வரும் எந்த அரசியல் வாதியையும் நான் தவறாக கூறவில்லை. காரைக்குடியில் உள்ள இளைஞர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோளை விடுக்கிறேன்.

அதாவது, 18 வயது பூர்த்தியடைந்த வாக்காளர்கள் 17 லட்சம் பேர் இருக்கிறார்கள். தமிழக தேர்தல் வரலாற்றிலேயே முதல் தலைமுறை வாக்காளர்கள் அதிகம் இருக்கிற தேர்தல் இதுதான் என்றார். மற்றும் 20 வயது முதல் 29 வயது வரை ஒரு கோடியே ஏழு லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

இந்த முறை நடைபெறும் தேர்தலில் 29 வயதுக்கு கீழ் ஒரு கோடியே 28 லட்சம் வாக்காளர்கள் வாக்கு செலுத்த இருக்கின்றனர். மாற்றம் என்பதை பற்றி இன்றைய இளைஞர்களுக்காகத் தான் பேசி வருகிறேன் என்றார்.

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.