தமிழக செய்திகள்

திமுக எனும் தீய சக்தியை மக்கள் நிராகரிக்க வேண்டிய நேரம் இது: அண்ணாமலை

திமுகவினரின் சமூக விரோதச் செயல்பாடுகள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது என்று அண்ணாமலை குற்றம் சாட்டினார்.

சென்னை,

பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-

சேலம் அன்னதானப்பட்டி பகுதியில், நிலத் தகராறு காரணமாக, தாய் மற்றும் பெண் குழந்தையை கடத்திச் சென்று, ஆபாசமாக புகைப்படம் எடுத்து மிரட்டியிருக்கிறார்கள் திமுக கொண்டலாம்பட்டி பகுதி அவைத்தலைவர் பதவியில் இருக்கும் செந்தூர் கார்த்தி என்ற நபரும் அவரது நண்பரும். ஆளுங்கட்சி என்ற மமதையிலும், அரசியல் செல்வாக்கு போர்வையிலும், பெண்கள் மற்றும் குழந்தைகளை ஆபாச புகைப்படம் எடுத்து மிரட்டியிருப்பது வெட்கக்கேடானது.

திமுக ஆட்சியில், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறியிருப்பதற்கு முக்கியக் காரணம், திமுகவில் பதவி வகிக்கும் இது போன்ற சமூக விரோதிகள்தான். முற்றிலும் மனிதத்தன்மையற்ற அளவுக்கு திமுகவினரின் சமூக விரோதச் செயல்பாடுகள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.

சமூகத்தின் அமைதிக்கும், நமது பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் திமுக எனும் தீய சக்தியை, மக்கள் முழுமையாக நிராகரிக்க வேண்டிய நேரம் இது. இந்த சமூக விரோதிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு முழு நீதி கிடைக்கச் செய்ய வேண்டும் என்று தமிழகக் காவல்துறையை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.