தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்கும் போது இருந்த விறுவிறுப்பைவிட தேர்தல் நடந்து முடிந்த பிறகு, நிலையான அரசை அமைப்பதற்கும், அதற்காக மற்ற கட்சிகளில் இருந்து எம்.எல்.ஏ.க்களை இழுக்கவும், த.வெ.க. அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள், பல்வேறு திருப்புமுனைகளுடன் மிகுந்த விறுவிறுப்பாக உள்ளன.ஆட்சி அமைக்க 118 எம்.எல்.ஏ.க்கள் தேவை என்ற நிலையில், 108 எம்.எல்.ஏ.க்களுடன் நின்ற த.வெ.க.வுக்கு முதல் திருப்புமுனையாக காங்கிரஸ் கட்சியின் ஆதரவு கிடைத்தது. தி.மு.க.வுடன் கூட்டணி உடன்படிக்கையில் போட்ட கையெழுத்து காய்வதற்குள், அமைச்சர் பதவி என்ற கோரிக்கையுடன் காங்கிரஸ் ஓடிச் சென்று த.வெ.க.வுடன் ஒட்டிக்கொண்டது. தி.மு.க.வில் இருந்த மற்ற கட்சிகளும் த.வெ.க.வுடன் கூட்டணி அமைத்துக் கொள்வதற்கான கதவை காங்கிரஸ் திறந்து வைத்தது.
எதிர்பார்த்த அடுத்த திருப்புமுனையாக, 2 கம்யூனிஸ்ட் கட்சிகள், ஐயூஎம்எல், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றின் ஆதரவும் த.வெ.க.வுக்கு படிப்படியாக கிடைத்தன. அமைச்சர் பதவி வேண்டாம், ஆதரவை தருகிறோம் என்று கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒதுங்கிக் கொண்டு மரியாதையை பெற்றன.ஐயூஎம்எல், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவை, சில நாட்கள் எடுத்துக் கொண்டு, இரவு பகல் பாராமல் ஆழமாக யோசித்தன, ஆலோசித்தன.அதாவது, ’துரோகிகளைப் போல், இவர்களும் உடனே போய் ஒட்டிக்கொண்டனர்” என்று யாரும் பேசிவிடக்கூடாது என்று நினைத்து அப்படி செய்தார்களோ என்ற சந்தேகம் வராமல் இல்லை. தி.மு.க.வுடன் இருந்த சில கட்சிகள், ’தேர்தலுக்கு பின்பு உங்களுடன் வந்துவிடுகிறோம்’ என்று த.வெ.க. கட்சிக்கு ஏற்கனவே சிக்னல் கொடுத்து, அந்த கட்சிக்காக தேர்தலின்போது உழைத்திருப்பார்களோ என்றும் எழுந்த சந்தேகத்தையும் மக்களால் அடக்கிவைக்க முடியவில்லை.
தி.மு.க.வுக்கு எதிராக இந்த திருப்பங்கள் ஒரு பக்கம் நடக்கும்போது, மற்றொரு பக்கத்தில் அ.தி.மு.க.வுக்குள்ளேயே இடிவிழுந்துவிட்டது. 47 எம்.எல்.ஏ.க்களுடன் சட்டசபைக்குள் நுழைந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களில் 25 பேர் த.வெ.க. அரசை ஆதரிப்பதாக, அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உத்தவை மீறி அறிவித்தனர். சி.வி.சண்முகம், வேலுமணிக்கு ஆதரவாக 25 பேர் செயல்பட்டனர். ஆனால் எடப்பாடி பழனிசாமி ஒரு தனிநபராக தோல்வியையும், துரோகத்தையும் சுமந்து கொண்டு, சட்டசபையில் உரையாற்றினார். அப்போது, தனது கட்சியில் இருந்து எம்.எல்.ஏ.க்கள் குதிரை பேரத்தில் கொண்டு செல்லப்படுவது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடர்வதற்கு ஏதுவான பாயின்ட்களை மறக்காமல் பதிவு செய்தார்.எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக 25 பேர் சென்ற நிகழ்வு, கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் அப்போதே தகுதி இழப்பு செய்யப்படுவதற்கான செயல்பாடாக அமைந்திருந்தது. ஆனாலும், எடப்பாடி பழனிசாமி தரப்பின் புகார் கடிதத்தையும், சி.வி.சண்முகம் தரப்பினர் புகார் கடிதங்களையும் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் வாங்கி வைத்துக் கொண்டு ஆய்வு செய்துகொண்டிருக்கிறார்.
இந்த சூழ்நிலையில் அடுத்ததாக, 25 பேர் குழுவில் இருந்த மரகதம் குமாரவேல், சத்யபாமா, ஜெயக்குமார், இசக்கி சுப்பையா ஆகிய 4 பேர் திடீரென தங்கள் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தனர். அவர்கள் கொடுத்த ராஜினாமா கடிதம், சபாநாயகரால் உடனே ஏற்கப்பட்டு, அப்போதே அந்த 4 தொகுதிகளும் காலியானதாக அரசிதழில் அறிவிக்கப்பட்டு, அந்த அரசிதழ்கள், இந்திய தேர்தல் கமிஷனுக்கு உடனே அனுப்பி வைக்கப்பட்டுவிட்டன. 25 பேர் குழு 21 பேர் குழுவாக மாறியது.அடுத்த திருப்பமாக 3 எம்.எல்.ஏ.க்கள் வரும் வாரத்தில் ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கு முன்பதாக, எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கவர்னரிடம் சென்று குதிரை பேரம் தொடர்பான புகாரை கொடுத்துள்ளனர். இதுவும், கோர்ட்டில் வழக்கு தொடர்வதற்கான முன் நடவடிக்கையாகவே கருதப்படுகிறது.
இப்படி திருப்புமுனைகளாகவே அரசியல் களம் காணப்பட்ட சூழ்நிலையில், 21 பேர் குழுக்களில் உள்ளவர்கள், எடப்பாடி பழனிசாமியிடம் சமீபத்தில் தஞ்சமடைந்தனர். அதோடு, எங்களை மன்னித்துவிடுங்கள் என்று தனித்தனி கடிதங்களையும் அவரிடம் கொடுத்தனர். ஆனால் சி.வி.சண்முகம் மட்டும் மன்னிப்புக் கடிதம் கொடுக்கவில்லை.ஆனாலும் எடப்பாடி பழனிசாமி, 21 பேரையும் (சி.வி.சண்முகத்தையும் சேர்த்து) மன்னிக்கலாம் என்று, அதற்கான பேரவை விதியை குறிப்பிட்டு சபாநாயகரிடம் கடிதம் கொடுத்துள்ளார். இந்த கடிதமும் சபாநாயகரின் பரிசீலனையில் உள்ளது. ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க. கட்சிக்கு சென்றுவிட்ட 4 பேர் மீது தகுதி இழப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி கடிதம் கொடுத்துள்ளார். இதுவும் கோர்ட்டுக்கு கொண்டு வரப்படலாம்.
எடப்பாடி பழனிசாமியின் கடிதங்கள் மீது சபாநாயகர் என்னென்ன முடிவுகளை எடுக்க முடியும்? என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அவரது கடிதத்தை அடிப்படையாக கொண்டு சபாநாயகர் 21 எம்.எல்.ஏ.க்கள் மீதும் கட்சித்தாவல் நடவடிக்கையை எடுக்காமல், மன்னிப்பை ஏற்றுக் கொண்டு, அவர்கள் தங்களின் பதவியில் தொடர வாய்ப்பளிக்கலாம்.எடப்பாடி பழனிசாமி கொடுத்த மன்னிப்பு கடிதம், 21 பேருக்கு மட்டும்தான் என்பதால், ராஜினாமா செய்த 4 பேரை கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யலாம். ஏற்கனவே ராஜினாமா செய்திருந்தாலும், இந்த நடவடிக்கையை எடுக்க சட்டப்படி தடையில்லை. என்றாலும், அவர்கள் அடுத்து வரும் இடைத்தேர்தலில் போட்டியிட எந்த நடவடிக்கையும் தடையை ஏற்படுத்தாது.தற்போது அ.தி.மு.க.வின் சட்டப்பிரிவில் கூறப்படும் தகவல் எதுவென்றால், துரோகம் செய்தவர்கள் சுமுகமாக அரசியல் செய்வதற்கு வாய்ப்பளித்துவிடக் கூடாது என்பதுதான். அதாவது, கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து ஒரு கத்தியை அவர்கள் மீது தொங்கவிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான்.