கிராம மக்கள் 
தமிழக செய்திகள்

தூத்துக்குடி: கோவில் விழாவில் குளவிகள் கொட்டியதில் 100 பேர் காயம்

பூஜைகள் அனைத்தும் முடிந்ததை தொடர்ந்து, அங்கு வந்திருந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

கோவில்பட்டி,

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே, சாமி கும்பிடச் சென்ற இடத்தில் திடீரென கதண்டு குளவிகள் கொட்டியதில் முதியவர்கள், இளைஞர்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புரட்டாசி அமாவாசை

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள குருமலை தாழையூத்தில் பொய்யாழி அய்யனார் கோவில் அருகில் முனியசுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு முடுக்கலாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி அமாவாசையை ஒட்டி வரும் சனிக்கிழமைகளில் சென்று சிறப்பு வழிபாடு நடத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

மழை வேண்டி சிறப்பு பூஜை

அதன்படி, நேற்று முடுக்கலாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஆண்கள் பெருந்திரளாக முனியசுவாமி கோவிலுக்கு சென்றனர். அங்கு கிராம மக்கள் அனைவரும் ஒன்று கூடி, மழை வேண்டி சாமிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகளை செய்தனர்.

குளவி தாக்குதல்

பூஜைகள் அனைத்தும் முடிந்ததை தொடர்ந்து, அங்கு வந்திருந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அன்னதானம் தொடங்க முயன்ற அந்த சமயத்தில், எதிர்பாராத விதமாக அப்பகுதியில் இருந்த மரத்தில் இருந்து கூட்டமாக வந்த கடந்தை குளவிகள் திடீரென அங்கு திரண்டிருந்த மக்களைச் சூழ்ந்து கொண்டு கொட்ட தொடங்கின.

100-க்கும் மேற்பட்டோருக்கு காயம்

இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் நாலாபுறமும் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இருப்பினும், குளவிகள் துரத்தித் துரத்திக் கொட்டியதில் அங்கிருந்த முதியவர்கள், வாலிபர்கள் என 100-க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது.

அரசு மருத்துவமனையில் சிகிச்சை

பாதிக்கப்பட்டவர்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள், காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் கோவில்பட்டி மக்களிடையே பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT