தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே பள்ளிக்கு செல்லுமாறு தாய் அறிவுறுத்தியதால் 12-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே உள்ள ஆத்திகுளம் கிராமம் காலனி தெருவைச் சேர்ந்த ராஜ்குமார், விவசாயி மற்றும் தினக்கூலி தொழிலாளி. இவரது மகள் வர்ஷா(17), 12-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த இரண்டு வாரங்களாக வர்ஷா பள்ளிக்கு செல்லாமல் இருந்துள்ளார்.
இதனால் வர்ஷாவின் தாயார், மகளிடம் பள்ளிக்கு செல்லுமாறு அறிவுரை கூறிவிட்டு காட்டு வேலைக்கு சென்றுள்ளார். இந்த நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வர்ஷா அறையின் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிய தாயார் கதவை திறந்து பார்த்தபோது, மகள் தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து கயத்தாறு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.