தமிழக செய்திகள்

தூத்துக்குடி: தூய்மை பணியாளர் கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை

திருச்செந்தூரில் தனியார் தொழிற்சாலையில் வேலை செய்த தூய்மை பணியாளரை முன்விரோதம் காரணமாக கொத்தனார், வாகன ஓட்டுநர் என 2 பேர் சேர்ந்து சதித்திட்டம் தீட்டி கத்தியால் குத்தி கொலை செய்தனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் மாவீரன்நகர், கந்தன் சாலையை சேர்ந்த வெண்ணிமுத்து மகன் கருப்பசாமி (வயது 23). இவர் தனியார் தொழிற்சாலையில் தூய்மைப் பணியாளராக வேலை பார்த்து வந்தார். கடந்த 2016-ம் ஆண்டு மாவீரன்நகரை சேர்ந்த கொத்தனார் விஜயகுமார்(25), வாகன ஓட்டுநர் கனகராஜ்(25) ஆகிய 2 பேருடன் குடும்ப விழா மற்றும் புத்தாண்டு கொண்டாட்டம் ஆகிய வெவ்வேறு சம்பவங்களில் மது அருந்தும்போது கருப்பசாமியுடன் தகராறு ஏற்பட்டுள்ளது.

கொலை செய்ய சதித்திட்டம்:

இந்தத் தகராறுகளில் கருப்பசாமி மேற்சொன்ன 2 பேரையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த முன்விரோதங்களை மனதில் வைத்துக் கொண்டு, விஜயகுமாரும், கனகராஜும் இணைந்து கருப்பசாமியை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டினர். கடந்த 2016, ஜூலை 14ம் தேதி இரவு, விஜயகுமார் திட்டமிட்டு பேசியபடி கருப்பசாமியை மாவீரன்நகர் அருந்ததி கலையரங்கத்தின் அருகே வரவழைத்துள்ளார்.

அங்கு வந்த கருப்பசாமியை 2 பேரும் சேர்ந்து கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்துவிட்டு, உடலை சற்று தொலைவில் உள்ள உடை மரத்தடியில் மறைத்துவிட்டு தப்பி ஓடினர். இதுகுறித்து திருச்செந்தூர் கோவில் அலுவலக உதவியாளராகப் பணிபுரியும் கருப்பசாமியின் தந்தை வெண்ணிமுத்து, திருச்செந்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

2 பேருக்கு ஆயுள் தண்டனை:

அந்த புகாரின்பேரில், அப்போதைய போலீஸ் இன்ஸ்பெகடர்கள் ஆடிவேல் மற்றும் ரெகுராஜன் ஆகியோர் கொலை வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி 2 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் எண் 2-ல் நடைபெற்று வந்தது. வழக்கின் சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்கள் தீர விசாரிக்கப்பட்டு, குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து நீதிபதி எம்.பிரீதா நேற்று தீர்ப்பு வழங்கினார்.

அதில் முதல் குற்றவாளியான விஜயகுமாருக்கு கொலை குற்றத்திற்காக ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம், சதித்திட்டம் பிரிவில் 2 ஆண்டுகள் கடுங்காவல், சட்டவிரோதமாக அடைத்து வைத்தல் பிரிவில் 1 ஆண்டு, கடுங்காவல் மற்றும் தடையங்களை மறைத்தல் பிரிவில் 7 ஆண்டுகள் கடுங்காவல், ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது.

இரண்டாவது குற்றவாளி கனகராஜ் என்பவருக்கு கொலைக் குற்றத்திற்காக ஆயுள் தண்டனை மற்றும் 5,000 ரூபாய் அபராதம். சதித்திட்டம் பிரிவில் 2 ஆண்டுகள் கடுங்காவல் மற்றும் தடையங்களை மறைத்தல் பிரிவில் 7 ஆண்டுகள் கடுங்காவல், 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த தண்டனைகளை 2 பேரும் ஒரே காலத்தில் அனுபவிக்க வேண்டும் என நீதிபதி தனது தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் சேவியர் ஞானப்பிரகாசம் ஆஜராகி வாதாடினார்.