தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறியதாக இதுவரை அரசியல் கட்சியினர் மீது 232 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 347 பேர் மீது மாவட்ட தேர்தல் நிர்வாகம் மற்றும் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினர் மற்றும் கண்காணிப்புக் குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சுவர் விளம்பரங்களை அழிக்காதது மற்றும் அனுமதி இன்றி பதாகைகள் வைத்தது தொடர்பாக 184 வழக்குகளும், சமூக வலைதள விதிமீறல் தொடர்பாக 4 வழக்குகளும், உரிய ஆவணமின்றி பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொண்டு சென்றதாக 44 வழக்குகளும் என மொத்தம் 232 வழக்குகள் பதிவாகியுள்ளன.
கட்சி வாரியாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள்:
தி.மு.க.- 54, அ.தி.மு.க.- 39, த.வெ.க.- 36, வி.சி.க.- 19, பா.ஜ.க.- 12, அ.ம.மு.க.-10, நாம் தமிழர்- 8, புதிய தமிழகம்- 8, காங்கிரஸ்- 2, ம.தி.மு.க.- 2, தே.மு.தி.க.- 1 என்றவாறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
347 பேர் மீது பிணைப்பத்திரம்:
தேர்தல் நேரத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்த வாய்ப்புள்ள நபர்களை காவல்துறை அடையாளம் கண்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள 1,868 வாக்குச்சாவடிகளில் 246 சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளன. அந்த பகுதிகளைச் சேர்ந்த 347 பேர் மீது முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்கள் உதவி கலெக்டர் முன்னிலையில் நன்னடத்தை பிணைப்பத்திரம் (Bond) தாக்கல் செய்துள்ளனர். இதேபோல் மாவட்டம் முழுவதும் மொத்தம் 596 பேர் மீது பல்வேறு பிரிவுகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பிடிவாரண்ட் குற்றவாளிகள் கைது:
பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்கள் மற்றும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த 2,075 பேரை போலீசார் பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். தேர்தல் அமைதியாகவும் நேர்மையாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து கண்காணிப்புப் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது.