தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாரால் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேரை போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் விற்பனையைக் கட்டுப்படுத்தும் வகையில் போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட கஞ்சா வழக்கில் தொடர்புடைய 3 குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் 16-ம் தேதி பதிவான இந்த வழக்கில், கயத்தாறைச் சேர்ந்த காசிப்பாண்டி (வயது 22), திருநெல்வேலி மாவட்டம் மானூர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ்(23) மற்றும் தாழையூத்தைச் சேர்ந்த ராஜகோபால்(23) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
இவர்களது தொடர் குற்ற நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் வகையில், மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்பேரில் இவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மேரி ஜமிதா தலைமையிலான போலீசார் பாளையங்கோட்டை மத்திய சிறைக்குச் சென்று, அங்கிருந்த காசிப்பாண்டி, ரமேஷ், ராஜகோபால் ஆகிய 3 பேரிடமும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கான அரசாணையை நேரில் வழங்கினர்.
போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோர் மீது இதுபோன்ற கடுமையான சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று தூத்துக்குடி மாவட்ட போலீசார் எச்சரித்துள்ளனர்.