தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் காவல் நிலைய கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 3 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து கூடுதல் மாவட்ட நீதிமன்றம்- I தீர்ப்பளித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2018-ம் ஆண்டு மேலநாட்டார்குளம் பகுதியில் வைத்து செல்லையா மகன் குரு என்பவரை முன்விரோதம் காரணமாக கொலை செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட அதே பகுதியை சேர்ந்த முத்தையா என்பவரது மகன்களான மாசிலாமணி (வயது 34), துரை(36) மற்றும் குருநாதன் மகன் செல்லதுரை(54) ஆகிய 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் (ADJ - I) நடைபெற்று வந்தது. இந்த நிலையில் மேற்சொன்ன நீதிமன்ற நீதிபதி தாண்டவம் நேற்று மாசிலாமணி, துரை மற்றும் செல்லதுரை ஆகிய 3 பேரையும் குற்றவாளிகள் என உறுதி செய்து அவர்களுக்கு தலா ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.