தமிழக செய்திகள்

தூத்துக்குடி: 462 கிலோ புகையிலை பொருட்கள், ரூ.14 லட்சம் பறிமுதல்- 3 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை புகையிலை பொருட்கள் கடத்தல், விற்பனை தொடர்பாக 459 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 496 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் சட்டவிரோத விற்பனைக்காக புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்திருந்த 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 462 கிலோ புகையிலை பொருட்கள், ரூ.14 லட்சம் மற்றும் ஒரு பைக்கை பறிமுதல் செய்தனர்.

தமிழ்நாடு அரசு உத்தரவின்படி, போதைப்பொருட்களின் கடத்தல் மற்றும் விற்பனையைத் தடுக்கும் நோக்கில், காவல்துறையின் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் போதைப்பொருள் தடுப்பு அதிரடிப்படை (Anti-Narcotics Task Force ) அமைக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடிப்படையினர் அந்தந்த மாவட்டங்களில் தீவிர ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு, போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோர் மீது உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

போலீசார் ரோந்து பணி

அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜ் தலைமையிலான ANTF போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தூத்துக்குடி தெற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சேக் அப்துல் காதர் மற்றும் போலீசாரருடன் இணைந்து தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதுகாலனி பகுதியில் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டபோது, அப்பகுதியில் பைக்கில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டு, அப்பகுதியில் உள்ள அவர்களது குடோனில் போலீசார் சோதனை செய்தனர்.

அதில், அவர்கள் புதுக்கோட்டை குலையன்கரிசல் பகுதியைச் சேர்ந்தவர்களான தங்கப்பன் மகன் மாரிராமன் (வயது 45), கல்யாணசுந்தரம் மகன் ராமசுப்பு(26) மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த பன்னீர்செல்வன் மகன் ராஜ்குமார்(35) ஆகியோர் என்பதும், அவர்கள் 3 பேரும் சட்டவிரோத விற்பனைக்காக புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.

462 கிலோ புகையிலை பொருட்கள், ரூ.14 லட்சம் பறிமுதல்- 3 பேர் கைது

உடனடியாக தெற்கு காவல் நிலைய போலீசார், மாரிராமன், ராமசுப்பு, ராஜ்குமார் ஆகிய 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 462 கிலோ புகையிலை பொருட்கள், ரொக்க பணம் ரூ.14 லட்சம் மற்றும் ஒரு பைக்கையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

2025-ல் 471 பேர் கைது

மேலும் கடந்த ஆண்டு (2025) புகையிலை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டதாக 439 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 471 நபர்கள் கைது செய்து அவர்களிடமிருந்து 3000 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் 27 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு 109 கடைகள் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு இதுவரை 496 பேர் கைது

அதேபோன்று இந்த ஆண்டு (2026) இதுவரை புகையிலை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டதாக 459 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 496 நபர்கள் கைது செய்து அவர்களிடமிருந்து 7,612 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் 28 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு 112 கடைகள் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT