தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூர் காவல் நிலைய கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 2 பெண்கள் உள்பட 5 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட கூடுதல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட போர்ட்சிட்டி நகர் பகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு, திருநெல்வேலி நொச்சிகுளம் பகுதியைச் சேர்ந்த நடராஜன் மகன் விக்ரமாதித்தன் (வயது 40) என்பவரை முன்விரோதம் காரணமாக கொலை செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட சரித்திர பதிவேடு குற்றவாளிகளான புதியம்புத்தூர் நடுவக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர்களான அர்ஜுனன் மகன் ராமர்(30), முருகன் மகன் சக்திவேல்(29), காட்டுராஜா மகன் முத்துக்கனிராஜ்(33), மேற்சொன்ன ராமரின் மனைவி(29) மற்றும் இறந்த விக்ரமாதித்தனின் மனைவி உள்பட 5 பேரையும் புதியம்புத்தூர் காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் - I (ADJ - I) நடைபெற்று வந்தது. இந்த நிலையில் மேற்சொன்ன நீதிமன்ற நீதிபதி தாண்டவம் நேற்று மேற்சொன்ன நபர்களான ராமர், சக்திவேல், முத்துக்கனிராஜ் உள்பட 2 பெண்கள் என மொத்தம் 5 பேரையும் குற்றவாளிகள் என உறுதி செய்து, அவர்களுக்கு தலா ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.