தமிழக செய்திகள்

தூத்துக்குடி: வாலிபரை ஆயுதங்களுடன் விரட்டிய 4 சிறுவர்கள் உள்பட 6 பேர் கைது

தூத்துக்குடி மாதாநகர் சந்திப்பில் வாலிபர் ஒருவர் தனது தாயுடன் காத்திருந்தபோது, அங்கு வந்த 6 பேர் கும்பல், தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாள், வாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் அந்த வாலிபரை வெட்ட முயன்றனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் முன்விரோதம் காரணமாக வாலிபரை கொலை செய்யும் நோக்கத்துடன் ஆயுதங்களுடன் விரட்டிய 4 இளம்சிறார்கள் உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தூத்துக்குடி தாளமுத்துநகர் சுடலையாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜம் (வயது 44). கன்னியாகுமரியில் வேலை செய்துவரும் இவரது மகன் செல்வகணேஷ்(20) காலில் ஏற்பட்ட காயம் காரணமாக சிகிச்சைக்கு செல்வதற்கு தனது தாயுடன் மாதாநகர் சந்திப்பில் காத்திருந்தார்.

வாலிபரை ஆயுதங்களால் தாக்க முயற்சி

அப்போது அங்கு வந்த அழகேசபுரம் பகுதியைச் சேர்ந்த பாண்டி மகன் மாரிவிஜய்(23), தஸ்நேவிஸ் நகர் பத்மநாபன் மகன் பிரகாஷ்(21) மற்றும் 4 இளம்சிறார்கள் ஆகிய 6 பேர் கொண்ட கும்பல், முன்விரோதம் காரணமாக செல்வகணேஷிடம் தகராறில் ஈடுபட்டு அவதூறாகப் பேசியுள்ளது. மேலும், தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாள், வாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் செல்வகணேஷை வெட்ட முயன்றுள்ளனர்.

4 சிறுவர்கள் உள்பட 6 பேர் கைது

அவர்களிடமிருந்து தப்பிக்கச் செல்வகணேஷ் ஓடியபோது, அந்த ஆயுதக் கும்பல் அவரை ஓட ஓட விரட்டியுள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ராஜம் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் சத்தமிட்டதால் அந்தப் பயங்கரவாதக் கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. இதுகுறித்து ராஜம் அளித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இதில் தலைமறைவாக இருந்த மாரிவிஜய், பிரகாஷ் மற்றும் 4 சிறுவர்கள் உள்பட 6 பேரையும் போலீசார் கைது செய்தனர்.