தமிழக செய்திகள்

தூத்துக்குடி: சாலையோரம் நடந்து சென்ற வடமாநில வாலிபர் கார் மோதி பலி

தூத்துக்குடியில் நடந்து வரும் நெடுஞ்சாலை ஒப்பந்தப் பணியில் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி அருகே சாலையில் நடந்து சென்ற போது கார் மோதிய விபத்தில் வடமாநில வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

உத்தரப்பிரதேச மாநில வாலிபர்

உத்தரப்பிரதேச மாநிலம், பீச்சபூர், அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த மாயராம் மகன் போலநாத் (வயது 30). இவர் தூத்துக்குடி பகுதியில் நடைபெற்று வரும் நெடுஞ்சாலை ஒப்பந்தப் பணியில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு இவர் பணி முடிந்து சாலையின் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

கார் மோதி பலி

அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த ஒரு கார், போலநாத் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற புதுக்கோட்டை போலீசார், அவரது உடலை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திவிட்டுச் சென்ற கார் மற்றும் ஓட்டுநர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.