தமிழக செய்திகள்

தூத்துக்குடி விமான நிலைய பெயர் மாற்றம்: மத்திய அரசு ஒப்புதல்

தூத்துக்குடி விமான நிலையத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது மாவட்ட மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி விமான நிலையத்தின் ஆங்கிலப் பெயரை "Tuticorin Airport" என்பதிலிருந்து அதிகாரப்பூர்வமாக "Thoothukudi Airport" என்று மாற்றி மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தென்தமிழகத்தின் முக்கியத் தொழில் மையமான தூத்துக்குடியில், வாகைகுளம் பகுதியில் கடந்த 1992-ம் ஆண்டு விமான நிலையம் திறக்கப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 'Tuticorin' என அழைக்கப்பட்ட பெயர் நடைமுறையில் இருந்து வந்தது. காலனித்துவ காலத்துப் பெயரான இதனை மாற்றி, நகரின் அசல் தமிழ்ப் பெயரான 'தூத்துக்குடி' என்பதையே ஆங்கிலத்திலும் (Thoothukudi) பயன்படுத்த வேண்டும் எனப் பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் வலுத்து வந்தன.

இதுதொடர்பாக மத்திய இணை மந்திரி எல்.முருகன் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பலர் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சரிடம் தொடர்ந்து மனுக்களை அளித்திருந்தனர். இந்த கோரிக்கையைப் பரிசீலித்த மத்திய விமானப் போக்குவரத்துத் துறை மந்திரி ராம்மோகன் நாயுடு, பெயர் மாற்றத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

விமானம், கப்பல், ரெயில் மற்றும் சாலை என அனைத்து விதமான போக்குவரத்து வசதிகளையும் கொண்ட தூத்துக்குடி, தற்போது வேகமான வளர்ச்சியை எட்டி வருகிறது. இந்தச் சூழலில், விமான நிலையத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது மாவட்ட மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் சர்வதேச அளவில் இனி 'Thoothukudi Airport' என்றே தூத்துக்குடி விமான நிலையம் அடையாளப்படுத்தப்படும்.