தமிழக செய்திகள்

தூத்துக்குடி: இன்ஸ்டாகிராமில் கத்தி, அரிவாளுடன் ரீல்ஸ் வெளியிட்ட சிறுவன் கைது

தூத்துக்குடியில் 2 சிறுவர்கள் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆபத்தான ஆயுதங்களை கையில் ஏந்திக் கொண்டு பொதுமக்களை மிரட்டும் வகையில் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியிட்டனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்ட சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

இன்ஸ்டாகிராமில் கத்தி, அரிவாளுடன் ரீல்ஸ்

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி செல்வராஜபுரத்தைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள், கத்தி மற்றும் அரிவாள் உள்ளிட்ட ஆபத்தான ஆயுதங்களை கையில் ஏந்திக் கொண்டு பொதுமக்களை மிரட்டும் வகையில் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளப் பக்கத்தில் ரீல்ஸ் வீடியோவைப் பதிவிட்டுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

16 வயது சிறுவன் கைது

இந்த தகவலின் அடிப்படையில், ஆறுமுகநேரி காவல் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தாமஸ் தீவிர விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் அதில் தொடர்புடைய 16 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய மற்றொரு சிறுவனை போலீசார் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.

சிறுவனுக்கு வலைவீச்சு

இதுகுறித்து ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். சமூக வலைதளங்களில் இதுபோன்ற ஆபத்தான மற்றும் சட்டம்-ஒழுங்கிற்கு பாதகமான வீடியோக்களைப் பதிவிடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT