தமிழக செய்திகள்

தூத்துக்குடி: தடுப்புச்சுவரில் மோதிய கார் கவிழ்ந்து விபத்து- 2 பேர் படுகாயம்

தூத்துக்குடி அருகே மறவன்மடம் தேசிய நெடுஞ்சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று சாலையோர தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

தூத்துக்குடி,

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராகுல். இவர் தனது நண்பர் ஒருவருடன் நேற்று இரவு தனது காரில் திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி நோக்கி பிராந்திய நெடுஞ்சாலையில் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தார். அந்த கார் தூத்துக்குடி புறநகர் பகுதியான மறவன்மடம் அருகே வந்தபோது, எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக ஓடியது. வேகமாக சென்ற அந்த கார், சாலையோரம் இருந்த சிமெண்ட் தடுப்புச்சுவர் மீது பலமாக மோதி, அடுத்த விநாடியே நடுரோட்டில் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

மோதிய வேகத்தில் காரின் முன் பகுதியில் இருந்து கரும்புகை கிளம்பி, சிறிது நேரத்தில் கார் முழுவதும் தீப்பற்றி எரியத் தொடங்கியது. கார் தீப்பற்றி எரிவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்தப் பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல், கவிழ்ந்து கிடந்த காரின் கதவுகளை உடைத்து, உள்ளே சிக்கியிருந்த ராகுல் உள்ளிட்ட 2 பேரையும் தீப்பொறிகள் சூழ்வதற்குள் பத்திரமாக வெளியே இழுத்து மீட்டனர். பொதுமக்கள் மீட்ட அடுத்த சில நிமிடங்களிலேயே கார் தீக்கிரையாகி உருக்குலைந்தது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த ராகுல் மற்றும் அவரது நண்பருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் அவசர சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்களின் கண்காணிப்பில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த கார் விபத்து குறித்து பெறப்பட்ட புகாரின் அடிப்படையில், புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலையில் கார் கவிழ்ந்து தீப்பற்றி எரிந்த இந்த விபத்துச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.