தமிழக செய்திகள்

பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கு தூத்துக்குடி கலெக்டர் பாராட்டு

தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 207 பள்ளிகளில், 92 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியைப் பதிவு செய்துள்ளன என்று தூத்துக்குடி கலெக்டர் விஜூ மகாஜன் தெரிவித்தார்.

தூத்துக்குடி,

தமிழகத்தில் நடந்து முடிந்த 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற தூத்துக்குடி மாவட்த்தைச் சேர்ந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்களை தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் விஷு மகாஜன் நேரில் அழைத்து பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் நேற்று நடைபெற்ற இந்த விழாவில், மாவட்டத்தின் கல்விச் சாதனைகள் குறித்து கலெக்டர் பேசுகையில், "தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 19,095 மாணவர்கள் (8,448 மாணவர்கள், 10,647 மாணவியர்) தேர்வு எழுதினர். 18,568 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாவட்டத்தின் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 97.24 சதவீதம் ஆகும். தமிழக அளவில் தூத்துக்குடி மாவட்டம் 6-வது இடத்தைப் பிடித்துச் சாதனை படைத்துள்ளது. மாவட்டத்தில் உள்ள மொத்தம் 207 பள்ளிகளில், 92 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.

தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களும் உயர்கல்வியில் சேருவதை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும். வேலைவாய்ப்பு குறித்த அச்சத்தைப் போக்கி அவர்களுக்கு ஊக்கமளிக்க வேண்டும். தேர்ச்சி பெறாத 527 மாணவர்கள் மற்றும் தேர்வு எழுத வராத மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்குச் சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும். ஜூன் மாதம் நடைபெறவுள்ள துணைத் தேர்வுகளில் அவர்களைப் பங்கேற்கச் செய்து வெற்றி பெற வைக்க வேண்டும்.

மாணவர்களுக்காகச் செயல்பட்டு வரும் "கனவு கட்டுப்பாட்டு அறை" குறித்த விழிப்புணர்வைத் தலைமையாசிரியர்கள் மாணவர்களிடம் கொண்டு செல்ல வேண்டும்" என்று தெரிவித்தார். இந்த விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சங்கீதா சின்னராணி, மாவட்டக் கல்வி அலுவலர்கள், பல்வேறு பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT