தூத்துக்குடி,
தூத்துக்குடி முத்துக்கிருஷ்ணாபுரம் 2-வது தெருவைச் சேர்ந்த பழனி என்பவரின் மகன் அழகுபாண்டியன் (வயது 68). இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (சி.பி.எம்.) கட்சியின் மூத்த முன்னோடியாகவும், அக்கட்சியின் கிளைச் செயலாளராகவும் பணியாற்றி வந்தார். மேலும் இவர் நிதி நிறுவனம் ஒன்றையும் நடத்தி வந்தார்.
நேற்று காலையில் அழகுபாண்டியன் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து புறப்பட்டு திருச்செந்தூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். சத்யாநகர் அருகே அவர் சென்றபோது, திருச்செந்தூரிலிருந்து தூத்துக்குடி நோக்கி வந்து கொண்டிருந்த ஒரு தனியார் பேருந்து, எதிர்பாராதவிதமாக இவரது இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியது.
இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த அழகுபாண்டியனை, அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் திருமுருகன், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, பேருந்து ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மூத்த கட்சி நிர்வாகியின் மறைவு கட்சித் தொண்டர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.