தூத்துக்குடி மாநகராட்சியில் துணை கமிஷனராக தற்போது சரவணக்குமார் உள்ளார். இவர் தூத்துக்குடிக்கு வருவதற்கு முன்னர் நாகர்கோவில் மற்றும் தஞ்சாவூர் மாநகராட்சிகளில் பணியாற்றியுள்ளார். அந்த சமயத்தில் தஞ்சாவூர் மாநகராட்சியில் ஜெபமாலைபுரத்தில் உள்ள குப்பைக் கிடங்கில் 28 ஏக்கர் பரப்பளவில் குவிந்து கிடந்த குப்பைகளைத் தரம் பிரித்து அப்புறப்படுத்தும் ஒப்பந்தத்தில் பல கோடி முறைகேடு செய்துள்ளார்.
தஞ்சாவூர் ஜெபமாலைபுரம் குப்பைக் கிடங்கில் பயோ மைனிங் முறையில் குப்பைகளைத் தரம் பிரித்து அப்புறப்படுத்துவதில் ரூ.9.56 கோடி முறைகேடு மற்றும் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக புகார்கள் எழுந்தன. இந்த புகாரின் பேரில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு (Vigilance) போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையின் தொடர்ச்சியாக, சரவணக்குமாரை துறை ரீதியாக பணி இடைநீக்கம் செய்து நகராட்சி நிர்வாகத் துறை இயக்குனர் நேற்று அதிரடி உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவு நகலை தூத்துக்குடி மாநகராட்சி கமிஷனர் பிரியங்கா நேற்று துணை கமிஷனர் சரவணக்குமாரிடம் நேரில் வழங்கினார்.
நேற்று வழக்கம்போல் அலுவலகப் பணிக்காக வந்திருந்த துணை கமிஷனர் சரவணக்குமார், கமிஷனரிடம் இருந்து இடைநீக்க உத்தரவைப் பெற்றுக் கொண்டார். நகலைப் பெற்ற அடுத்த சில நிமிடங்களிலேயே அவர் மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து விறுவிறுவென வெளியேறிச் சென்றார். இந்தச் சம்பவம் மாநகராட்சி ஊழியர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.