தமிழக செய்திகள்

தூத்துக்குடி மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்; ரூ.2.98 கோடி உபரி நிதி: மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்

தூத்துக்குடி மாநகராட்சி சாதாரண கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் கமிஷனர் பிரியங்கா, துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலையில் நடந்தது.

தூத்துக்குடி மாநகராட்சி சாதாரண கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் கமிஷனர் பிரியங்கா, துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலையில் நடந்தது. கூட்டம் தொடங்கியதும், தூத்துக்குடி மாநகராட்சியின் நடப்பு நிதி ஆண்டிற்கான (2026-2027) உத்தேச வரவு செலவு அறிக்கையை மேயர் தாக்கல் செய்தார். இந்த அறிக்கையின்படி, பல்வேறு வரி மற்றும் வரி அல்லாத இனங்கள் மூலமாக மொத்தம் ரூ.176.97 கோடி வருமானம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் முக்கிய வரவு இனங்களாக, சொத்து வரி மற்றும் இதர வரியிலா இனங்கள் மூலமாக ரூ.38.0239 கோடி, முத்திரைக்கட்டணம் மற்றும் கேளிக்கை வரியாக ரூ.6 கோடி வருவாய் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அரசு மானியம் மற்றும் மாநில பகிர்மான நிதியாக ரூ.77.14 கோடி, 15-வது நிதிக்குழு மானியமாக ரூ.10 கோடி மற்றும் ஏனைய வருமானங்கள் மூலமாக ரூ.45.8103 கோடி என மொத்தம் ரூ.176.9742 கோடி வருமானம் வரும் என கணக்கிடப்பட்டுள்ளது.

செலவினங்களைப் பொறுத்தவரை, நடப்பு நிதியாண்டில் ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான செலவுகளுக்கு ரூ.82.7675 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நிர்வாகச் செலவினங்களுக்கு ரூ.8.1725 கோடியும், சாலைகள், கட்டிடங்கள் மற்றும் இதர பராமரிப்பு இயக்கச் செலவுகளுக்கு ரூ.68.24 கோடியும் செலவிடப்பட உள்ளது. அத்துடன் நிதி மற்றும் திட்டமிட்ட செலவினங்களுக்கு ரூ.2.8065 கோடியும், பொது நிதி பங்களிப்பிற்காக ரூ.12 கோடியும் என மொத்தம் ரூ.173.9865 கோடி செலவாகும் என உத்தேசமாகத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த நிதியாண்டின் இறுதியில் சுமார் ரூ.2.9877 கோடி உபரி வருமானம் கிடைக்கும் என மேயர் தனது உரையில் தெரிவித்தார்.

பட்ஜெட் தாக்கலைத் தொடர்ந்து, மாநகரின் ஒட்டுமொத்த வளர்ச்சி கருதி 45 புதிய அறிவிப்புகளை மேயர் வெளியிட்டார். குறிப்பாக, வி.வி.டி சிக்னல் முதல் 4-வது கேட் வரை சாலை அகலப்படுத்தப்பட்டு நடைபாதைகள் முறைப்படுத்தப்படும் எனத் தெரிவித்தார். மாநகரின் முக்கியப் பகுதிகளான ரஹ்மத்நகர், டூவிபுரம் 5-வது தெரு, பிரையண்ட்நகர் 1-வது தெரு, கடற்கரை சாலை மற்றும் பக்கிள் ஓடை அணுகு சாலை ஆகியவற்றில் மோட்டார் இல்லாத போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில் பிரத்யேக வழித்தடங்கள் அமைக்கப்படும் என்றும் கூறினார். மேலும் பொதுமக்களுக்கும் பாதசாரிகளுக்கும் இடையூறாக இருக்கும் சாலையோரக் கடைகளை ஒழுங்குபடுத்தி, விற்பனையாளர்களுக்கெனத் தனி விற்பனை மண்டலங்கள் உருவாக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

அ.தி.மு.க. வெளிநடப்பு:

முன்னதாக மேயர் பட்ஜெட்டை வாசிக்கத் தொடங்கிய போதே அ.தி.மு.க. உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அ.தி.மு.க. கொறடா மந்திரமூர்த்தி எழுந்து, கடந்த ஐந்தாண்டு காலத்தில் மாநகராட்சியில் எந்தவொரு உருப்படியான வளர்ச்சிப் பணிகளும் நடைபெறவில்லை என்று கூறி முழக்கமிட்டார். அதனைத் தொடர்ந்து, தி.மு.க. அரசைக் கண்டிக்கும் வகையிலான துண்டுப் பிரசுரங்களை ஏந்தியபடி அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெற்றி செல்வன், ஜெயலட்சுமி, பத்மாவதி, ஜெயராணி உள்ளிட்டோர் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

இந்த மாநகராட்சி கூட்டத்தில் உதவி கமிஷனர் சரவணகுமார், மாநகர துணை பொறியாளர் சரவணன், சுகாதார அலுவலர் சரோஜா, மண்டலத் தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்கள் பலர் கலந்து கொண்டனர்.