தமிழக செய்திகள்

தூத்துக்குடி: கைதான இளைஞர் உயிரிழந்த விவகாரம் - உடல் பிரேத பரிசோதனை தொடக்கம்

3 மருத்துவர்கள், குற்றவியல் நடுவர் முன்னிலையில் பிரேத பரிசோதனை நடைபெறுகிறது.

தூத்துக்குடி,

கடந்த 17.07.2026 அன்று, தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்தில், தூத்துக்குடி அமுதா நகர் பகுதியைச் சேர்ந்த அருணாசலம் (24) என்பவர் மதுவிலக்கு அமலாக்க சோதனையின் போது 180 மில்லிலிட்டர் அளவிலான 120 மதுபான பாட்டில்களை சட்டவிரோதமாக வைத்திருந்தது கண்டறியப்பட்டதால், தூத்துக்குடி தெற்கு காவல் நிலைய குற்ற எண். 751/2026 ச/பி தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தின் பிரிவுகள் 4(1)(A) மற்றும் 14 -ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

வெளிப்புற காயங்கள் இல்லை

அதனைத் தொடர்ந்து, 17.07.2026 அன்று மாலை சுமார் 5.50 மணியளவில், அவரை தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, மருத்துவ பரிசோதனைக்காக காவல் துறையினர் அழைத்துச் சென்றனர். பரிசோதனை மேற்கொண்ட டாக்டர், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தகுதியுடையவர் என சான்றளித்ததுடன், அவரது உடலில் எந்தவித வெளிப்புறக் காயங்களும் இல்லை என்றும் மருத்துவ சான்றிதழில் சான்றளித்தார்.

லாக்-அப்

சட்ட மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னர், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை நிறைவு செய்வதற்காக அவர் மீண்டும் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு, அப்போது காவல் நிலையத்தில் இருந்த பிற கைதிகளுடன் காவல் நிலைய லாக்-அப்பில் வைக்கப்பட்டார். லாக்-அப்பில் இருந்த போது, மற்ற கைதிகளுடன் இயல்பாக நின்று பேசிக் கொண்டிருந்த அவர், திடீரென தானாகவே மயங்கி கீழே விழுந்தார்.

இச்சம்பவம் லாக்-அப்பின் முன்புறத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். சிகிச்சையின்போது, அவருக்கு மருத்துவ நடைமுறை மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும், அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை பலனளிக்காமல், கடந்த 23-ந்தேதி அவர் உயிரிழந்தார் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

இளைஞர் மரணம்

இச்சம்பவம் தொடர்பாக, அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, சட்டப்படி விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் தென்பாகம் காவல் நிலையத்தில் அருணாச்சலம் மயங்கி விழுந்த வீடியோ வெளியிடப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி இளைஞர் மரணம் தொடர்பாக அவரது குடும்பத்தினரிடம் மாஜிஸ்திரேட் விஜயராஜ் நேரில் விசாரணை நடத்தினார்.

பிரேத பரிசோதனை

இதையடுத்து இளைஞர் அருணாசலத்தின் உடலுக்கு 24-ந்தேதி(இன்று) தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடத்த மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதன்படி அருணாசலத்தின் உடல் பிரேத பரிசோதனை இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. தூத்துக்குடி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 3 மருத்துவர்கள், குற்றவியல் நடுவர் முன்னிலையில் பிரேத பரிசோதனை நடைபெறுகிறது. கோர்ட்டு உத்தரவின்படி பிரேத பரிசோதனை முழுவதுமாக வீடியோ பதிவு செய்யப்படுகிறது.