தூத்துக்கடி,
தூத்துக்குடியில் விசைப்படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றபோது திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மீனவரும் தி.மு.க. நிர்வாகியுமான கிளாஸ்டன் உயிரிழந்தார்.
தூத்துக்குடி காந்திநகர் 4-வது தெருவைச் சேர்ந்தவர் கிளாஸ்டன் (வயது 50). மீனவரான இவர், 40-வது வார்டு தி.மு.க. நிர்வாகியாகவும் பொறுப்பு வகித்து வந்தார். இந்த நிலையில் 11 நாட்களுக்குப் பிறகு நேற்று (திங்கள்கிழமை) தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்திலிருந்து சக மீனவர்களுடன் ஒரு விசைப்படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றார்.
உவரி அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, கிளாஸ்டனுக்கு திடீரென கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக மீனவர்கள், அவருக்கு உடனடியாக முதலுதவி அளித்ததுடன், விசைப்படகை அவசரமாக திருப்பி தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்திற்குக் கொண்டு வந்தனர்.
பின்னர் துறைமுகத்திலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் கிளாஸ்டன் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து கூடங்குளம் மரைன் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பேச்சிமுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.