தமிழக செய்திகள்

தூத்துக்குடி: தனியார் பேருந்து விபத்தில் டிரைவர் பலி; 9 பயணிகள் படுகாயம்

தூத்துக்குடி மறவன்மடம் அருகே சென்ற ஒரு தனியார் பேருந்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இருந்த மின்கம்பம் மற்றும் ஒரு பனைமரத்தின் மீது மோதி விபத்திற்குள்ளானது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம், ஏரலில் இருந்து தூத்துக்குடி வழியாக பசுவந்தனைக்கு இன்று காலை ஒரு தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை செய்துங்கநல்லூர் அருகே உள்ள வில்லாகுளம் கிராமத்தைச் சேர்ந்த பிச்சையா என்பவரது மகன் மணிமுத்து (வயது 55) ஓட்டி வந்தார். நடத்துனராக ஓட்டப்பிடாரம் அருகே உள்ள ஆவரைகுளம் கிராமத்தை சேர்ந்த சுரேஷ் பணியாற்றி வந்தார்.

சுமார் 60-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்த அந்தப் பேருந்து, இன்று காலையில் தூத்துக்குடி-திருநெல்வேலி பிரதான சாலையில் உள்ள மறவன்மடம் அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. கட்டுப்பாடின்றி சென்ற பேருந்து, சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதியதோடு, அங்கிருந்த ஒரு பனைமரத்தின் மீதும் மோதியது.

அதன் பின்னரும் நிற்காமல் சுமார் 100 அடி தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டு, ஒரு கட்டிடத்தின் மீது மோதி நின்றது. இந்தக் கோர விபத்தில், பேருந்து டிரைவர் மணிமுத்து இடிபாடுகளுக்குள் சிக்கி அதே இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் பேருந்தில் பயணம் செய்த பயணிகளில் 9 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து, விபத்திற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. இந்த விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

SCROLL FOR NEXT