தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் அருகே உள்ள சத்யா நகரை சேர்ந்தவர் கணேசன் (48), கூலித்தொழிலாளி. இவரது முதல் மனைவி உயிரிழந்த நிலையில், மணியம்மாள் (42) என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கும் 4 பிள்ளைகள் உள்ளனர்.
கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மணியம்மாள், சில நாட்களுக்கு முன்பு மதுரையில் வசிக்கும் தனது மகள் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
இந்நிலையில், கணேசன் மதுரைக்கு சென்று மனைவியை சமாதானப்படுத்தி மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்தார். ஆனால் வீட்டிற்கு வந்ததும் மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.
இதில் ஆத்திரமடைந்த கணேசன், கம்பு மற்றும் கைகளால் மணியம்மாளை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த மணியம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சம்பவத்திற்குப் பிறகு கணேசன் அங்கிருந்து தப்பிச் சென்றார். தகவலறிந்த மெஞ்ஞானபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும், மணியம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த கணேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.