பாதிக்கப்பட்ட சிறுமிகளின் புகைப்படம், பெயர் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட அடையாளங்களை சமூக ஊடகங்கள் அல்லது இணையதளங்களில் வெளியிடுவது இந்தியச் சட்டப்படி (POCSO மற்றும் பிற பிரிவுகள்) கடும் குற்றமாகும். இது பாதிக்கப்பட்ட சிறுமியின் தனிப்பட்ட பாதுகாப்பிற்கும், கண்ணியத்திற்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகும்.
தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேடநத்தம் மாணவி கொலை வழக்கில், அந்த சிறுமியின் அடையாளங்களை வெளிப்படுத்தும் வகையில் பதிவிட்டவர்கள் மீது இதுவரை 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட சிறுமியின் அடையாளங்களை சமூக வலைதளங்களில் பதிவிடும் நபர்கள் மற்றும் அத்தகைய பதிவுகளை அனுமதிக்கும் சமூக ஊடக நிறுவனங்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.