தூத்துக்குடி,
தூத்துக்குடி அருகேயுள்ள முள்ளக்காடு பகுதியைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி (வயது 52), லாரி ஓட்டுநர். இவருடைய மனைவி வசந்தா. இவருடைய பெயரில் உள்ள பூர்வீகச் சொத்தில், வசந்தாவின் அண்ணனும் உப்பளத் தொழிலாளியுமான காசி(50) என்பவர், தனக்கும் பங்கு வேண்டும் என்று கேட்டுள்ளார். இதனால் இவர்களுக்கு இடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 15.6.2020 அன்று காசி மற்றும் அவரது மகன் சதீஷ்குமார் ஆகியோர் முத்தையாபுரம் நேசமணி நகர் பகுதியில் நின்றுகொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த தட்சிணாமூர்த்தி, அவரது மனைவி வசந்தா, மகள் பரிபூரண முத்துச்செல்வி ஆகியோர் காசி, சதீஷ்குமார் ஆகியோரை சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர்.
இதில் பலத்த காயமடைந்த 2 பேரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி காசி பரிதாபமாக உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து முத்தையாபுரம் காவல்துறையினர் கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக மாற்றிப்பதிவு செய்து தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட 3 பேரைக் கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி தாண்டவன், குற்றம் சாட்டப்பட்ட தட்சிணாமூர்த்திக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். போதிய ஆதாரங்கள் இல்லாததால் வசந்தா, பரிபூரண முத்துச்செல்வி ஆகியோர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வழக்கறிஞர் ஆனந்த் கேபிரியேல் ராஜ் ஆஜராகி வாதாடினார்.