தமிழக செய்திகள்

தூத்துக்குடி: கடலுக்கு செல்ல தயார் நிலையில் விசைப்படகுகள்; ஆயத்த பணிகளில் மீனவர்கள் தீவிரம்

கடந்த ஏப்ரல் மாதம் 14-ந் தேதி முதல் விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

தூத்துக்குடி,

தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-ன் கீழ் தமிழகத்தின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் திருவள்ளூர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி நகரம் வரை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 15-ந் தேதி முதல் ஜூன் 14-ந் தேதி வரை மீன் இனப்பெருக்க காலமாக கருதப்படுகிறது. இந்த காலகட்டத்தில் மீன்வளத்தை பாதுகாக்கும் வகையில், மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் கொண்டு கடலில் மீன்பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு அரசாணை வழங்கப்பட்டு உள்ளது.

தயார்நிலையில் விசைப்படகுகள்

அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் 14-ந் தேதி முதல் விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் உள்ள 272 விசைப்படகுகள், வேம்பாரில் உள்ள 33 விசைப்படகுகள், தருவைகுளத்தில் உள்ள 280 விசைப்படகுகள் ஆக மொத்தம் 585 விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இந்த காலகட்டங்களில் மீனவர்கள் தங்கள் படகுகளை பழுதுநீக்குதல், வலைகளை சீரமைத்தல் போன்ற பணிகளை மேற்கொண்டு வந்தனர். பெரும்பாலான விசைப்படகுகளில் பராமரிப்பு பணிகள் முடிக்கப்பட்டு படகுகள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இதனால் மீண்டும் கடலுக்கு செல்வதற்கான ஆயத்த பணிகளில் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.