தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம், சங்கரலிங்கபுரம் அருகே கவுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன் (வயது 45). இவர் சங்கரலிங்கபுரம் பகுதியில் உள்ள கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நடைபெற்ற இரவு இன்னிசைக் கச்சேரி நிகழ்ச்சியை காண்பதற்காக சென்றிருந்தார். பின்னர் நள்ளிரவில் அவர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
இந்த நிலையில் குணசேகரன் சல்லிசெட்டிபட்டி ஊருக்கு வடக்கே சாலையில் நடந்து சென்றபோது, பின்னால் அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத நான்கு சக்கர வாகனம் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தார். விபத்தை ஏற்படுத்திய வாகனம் நிறுத்தப்படாமல் அதிவேகமாக தப்பிச் சென்றது.
அந்த வழியாக வந்த பொதுமக்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் பணியாளர்கள் விரைந்து வந்து அவரை பரிசோதித்துப் பார்த்தபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதை உறுதி செய்தனர். இதுகுறித்து சங்கரலிங்கபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்திவிட்டு நிறுத்தாமல் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.