தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சூரங்குடி போலீஸ் நிலையத்தில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த சுதாகர் கடந்த 6 மாத காலமாக இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். சூரங்குடி அருகே உள்ள மேல்மாந்தை, வேம்பார் உள்ளிட்ட கிராமங்களில் நடைபெறும் கோவில் திருவிழாக்களுக்கு அனுமதி வழங்குவதற்காக லஞ்சம் பெற்றதாக இவர் மீது பல்வேறு புகார்கள் குவிந்தன.
இதுதொடர்பாக திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. திருநாவுக்கரசு, தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் ஆகியோருக்கும் புகார்கள் வந்தன. இதன் எதிரொலியாக இன்ஸ்பெக்டர் சுதாகர் கடந்த 7-ந்தேதி முதல் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். போலீஸ் உயர் அதிகாரிகள் துறைரீதியாக விசாரணை நடத்தினர்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுதாகரை, திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. திருநாவுக்கரசு பணியிடை நீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டு உள்ளார். லஞ்ச புகாரில் சிக்கிய இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.