தூத்துக்குடி,
தூத்துக்குடி அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில், ஜெராக்ஸ் கடை பெண் உரிமையாளரை இரும்பு கம்பியால் அடித்து முகம் சிதைத்துக் கொடூரமாகக் கொலை செய்த காவலரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி அருகே உள்ள முடிவைத்தானேந்தல் கிராமத்தைச் சேர்ந்த டிரைவர் வெங்கடசுப்பிரமணி. இவரது மனைவி பிரியா (வயது 40). இந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். பிரியா முடிவைத்தானேந்தல் மெயின் ரோட்டில் ஜெராக்ஸ் கடை நடத்தி வந்தார்.
பிரியாவின் அக்கா லட்சுமி(42), கணவர் இறந்ததால் பிரியா வீட்டோடு வசித்து வந்தார். இந்த நிலையில் லட்சுமிக்கும் அதே ஊரைச் சேர்ந்த பரமசிவம் மகன் முத்துக்குமார்(33) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் பிரியாவுக்கு தெரியவரவே, அவர் தனது அக்காவை கண்டித்துள்ளார். இதனை லட்சுமி முத்துக்குமாரிடம் தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த முத்துக்குமார், நேற்று இரவு பிரியா தனது ஜெராக்ஸ் கடையைப் பூட்டிக் கொண்டிருந்தபோது அங்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரமடைந்த முத்துக்குமார் அருகில் கிடந்த இரும்பு கம்பியால் பிரியாவின் தலையில் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் முகம் சிதைந்து பிரியா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புதுக்கோட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் குமாரவேல் பாண்டியன் மற்றும் போலீசார், பிரியாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தை தூத்துக்குடி ரூரல் டி.எஸ்.பி. சுகிர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதையடுத்து தப்பியோடிய முத்துக்குமாரை புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட முத்துக்குமார், தட்டாரமடம் காவல் நிலையத்தில் போலீஸ்காரராகப் பணியாற்றி வந்தவர். மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்த இவர், ஏற்கனவே மாமனார் உள்ளிட்ட 2 பேரை அரிவாளால் வெட்டிய வழக்கில் புதுக்கோட்டை போலீசாரால் கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமினில் வெளியே வந்த நிலையில், இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.