தமிழக செய்திகள்

அமெரிக்காவின் முன்னணி விஞ்ஞானிகள் பட்டியலில் 6-வது முறையாக இடம்பிடித்த தூத்துக்குடி பேராசிரியர்

தமிழ்நாட்டில் நிலத்தியல் துறையில் பேராசிரியர் செல்வம் முதலிடத்தையும் பெற்றுள்ளார்.

தூத்துக்குடி,

முன்னணி விஞ்ஞானிகள்

அமெரிக்காவின் 'ஸ்டான்போர்ட் எல்ஸ் விர்' பட்டியலில் உலகளவில் சுமார் 1 லட்சம் முன்னணி விஞ்ஞானிகள் உள்ளனர். இந்த பட்டியல் 22 அறிவியல் துறைகள் மற்றும் 176 துணைத் துறைகளை உள்ளடக்கியதாகும். ஆராய்ச்சி தரம், மேற்கோள்களின் எண்ணிக்கை போன்ற புள்ளிவிவர அடிப்படையிலான அளவுகோல்கள் மூலம் முன்னணி விஞ்ஞானிகள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

2026-ம் ஆண்டுக்கான 2 சதவீத சிறந்த விஞ்ஞானிகள் அடங்கிய ஸ்டான்போர்ட் எல்ஸ்விர் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. இதில் தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி நிலத்தியல் துறை பேராசிரியர் செல்வம் உலகளவில் 56 ஆயிரத்து 663-வது இடத்தை பெற்றுள்ளார்.

6-வது முறையாக மீண்டும்...

2025-ம் ஆண்டில் அவர் உலகளவில் 57 ஆயிரத்து 17-வது இடத்தை பெற்றிருந்த அவர். தற்போது 6-வது முறையாக மீண்டும் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சுற்றுச்சூழல் அறிவியல் துறையில் உலகளவில் 1,40,934 ஆராய்ச்சியாளர்களில் 1,253-வது இடத்தை பெற்றுள்ள அவர், இந்திய அளவில் இந்த துறையில் 74-வது இடத்தை பெற்றுள்ளார்.

அதேபோல் அனைத்து அறிவியல் துறைகளையும் உள்ளடக்கிய இந்திய தரவரிசையில் 6,922 ஆராய்ச்சியாளர்களில் 1,042-வது இடத்தைப் பெற்று, முதல் 0.15 சதவீத ஆராய்ச்சியாளர்களுக்குள் இடம் பிடித்துள்ளார்.

வாழ்த்து

தமிழ்நாட்டில் நிலத்தியல் துறையில் முதலிடத்தையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பேராசிரியர் செல்வம், நிலத்தடி நீர்வள ஆய்வு மற்றும் மேலாண்மை, கடலோர நிலத்தடி நீர், சுற்றுச்சூழல் மாசுபாடு, நுண்நெகிழி துகள்களால் ஏற்படும் பாதிப்புகள், கடலோரச் சுற்றுச்சூழல் மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கியத் துறைகளில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

இதுவரை 150-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும், 5 நூல்களையும் வெளியிட்டுள்ளார். பேராசிரியர் செல்வத்துக்கு வ.உ.சி. கல்லூரி செயலாளர் ஏ.பி.சி.வி.சொக்கலிங்கம், முதல்வர் வீரபாகு மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT