தூத்துக்குடி,
தூத்துக்குடியில் திருட்டு வழக்கு விசாரணைக்காக பிடிக்கச் சென்ற போலீசாரைக் கண்ட ரவுடி, பிளேடால் தனது கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தூத்துக்குடி மினி சகாயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மரியா அந்தோணி ஆக்னல் (வயது 31). இவர் மீது 2 கொலை வழக்குகள் உள்பட மொத்தம் 30 வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் இவர் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் சரித்திரப் பதிவேடு குற்றவாளியாக பதிவு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மே மாதம் திருச்செந்தூர் அருகே சோனகன்விளை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருந்த இவரை தனிப்படை போலீசார் சுற்றிவளைத்து துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். பின்னர் ஜாமினில் வெளியே வந்த அவர், தூத்துக்குடி பூபாலராயபுரம் பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் சமீபத்தில் நடைபெற்ற திருட்டு சம்பவங்களில் பதிவான கைரேகைகள், மரியா அந்தோணி ஆக்னலின் கைரேகைகளுடன் ஒத்துப்போவதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்துவதற்காக தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் சென்றுள்ளனர். போலீசாரை கண்டதும் அதிர்ச்சியடைந்த மரியா அந்தோணி ஆக்னல், தான் வைத்திருந்த பிளேடால் தனது கழுத்தை அறுத்துக் கொண்டார். உடனடியாக படுகாயமடைந்த அவரை மீட்ட போலீசார், சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.