தமிழக செய்திகள்

தூத்துக்குடி: சப்-இன்ஸ்பெக்டரை துப்பாக்கியால் சுட்ட ரவுடி மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு

திருச்செந்தூரில் ஒரு ரவுடியை போலீசார் பிடிக்க சென்றபோது, அந்த ரவுடி தனது கழுத்தில் கத்தியால் வெட்டி தற்கொலைக்கு முயற்சித்தபோது, அதை தடுத்த சப்-இன்ஸ்பெக்டரை நோக்கி தான் மறைத்து வைத்திருந்த நாட்டு துப்பாக்கியால் சுட்டார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மினிசகாயபுரம் பகுதியைச் சேர்ந்த ஆர்க்(எ) மரியஅந்தோணி (வயது 35), ஒரு பிரபல ரவுடி ஆவார். இவர் மீது தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி என 29-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்த இவர், திருச்செந்தூர் அருகே சோனகன்விளை காணியாளன்புதூரில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதை தொடர்ந்து தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் ராஜபிரபு தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் மரியஅந்தோணியை அந்த வீட்டில் வைத்து சுற்றி வளைத்தனர். அப்போது போலீசாரிடம் சிக்காமல் இருக்க மரியஅந்தோணி கத்தியால் தனது கழுத்தை வெட்டிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை தடுக்க முயன்ற சப்-இன்ஸ்பெக்டர் ராஜபிரபுவை நோக்கி, மறைத்து வைத்திருந்த நாட்டு துப்பாக்கியால் மரியஅந்தோணி சுட்டார்.

இதில் சப்-இன்ஸ்பெக்டர் காயமடையவே, தற்காப்பிற்காக அவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் மரியஅந்தோணியின் வயிற்றுப் பகுதியில் குண்டு பாய்ந்தது. காயமடைந்த மரியஅந்தோணி பலத்த பாதுகாப்புடன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரிடமிருந்து ஒரு நாட்டு துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக, திருச்செந்தூர் தாலுகா போலீசார் மரியஅந்தோணி மீது கொலை முயற்சி, அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், பயங்கர ஆயுதங்களை வைத்திருத்தல் அவதூறாக பேசுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.