சென்னை
தூத்துக்குடி - சில்லாநத்தம் பகுதியில் ரூ.774 கோடியில் மின் வாகன உற்பத்தி தொழிற்பூங்கா அமைக்கப்படும் என தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா அறிவித்துள்ளார்.
சட்டசபையில் இயற்கை வளங்கள் துறை, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் ஆகிய துறைகள் மீதான மானியக்கோரிக்கை விவாதம் நேற்று நடைபெற்றது.
இதில், தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா பேசும்போது பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதன்படி, தூத்துக்குடி - சில்லாநத்தம் பகுதியில் சுமார் 1,294 ஏக்கர் நிலப்பரப்பில் "மின் வாகன உற்பத்தி தொழிற்பூங்கா" சிப்காட் நிறுவனத்தால் ரூ.774 கோடியில் அமைக்கப்படும். இதன்மூலம் ரூ.7,000 கோடி முதலீடுகளை ஈர்ப்பதுடன், 10,000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
இப்பூங்காவில் அடிப்படை, சமூக மற்றும் சிறப்பு உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும் என அமைச்சர் கீர்த்தனா அறிவித்துள்ளார்.
இதேபோன்று உப்பள தொழிலாளர் குடும்பத்திற்கு ஆண்டொன்றுக்கு வழங்கப்பட்டு வரும் மழைக்கால நிவாரண தொகை ரூ.5,000-ல் இருந்து ரூ.7,000 ஆக உயர்த்தி வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலம் சுமார் 23,000 தொழிலாளர் குடும்பங்கள் பயனடையும். இதற்கான ரூ.16.78 கோடி செலவினை அரசே ஏற்கும் என்றும் அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார்.
தமிழ்நாடு உப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்படும் இருவித செறிவூட்டப்பட்ட உப்பு, வெற்றி செறிவூட்டப்பட்ட உப்பு நியாய விலைக்கடைகளிலும் வெளிச்சந்தைகளிலும் விற்பனை செய்யப்படும்.