தமிழக செய்திகள்

தூத்துக்குடி மாணவி கொலை வழக்கு: 10 நாட்களுக்கு பிறகு உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு

தூத்துக்குடி மாணவி கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிக்கு நீதிமன்றம் மூலம் தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என அந்த மாணவியின் குடும்பத்தினரும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே வேடநத்தம் கிராமத்தில் கடந்த மார்ச் 10-ம் தேதி இயற்கை உபாதை கழிக்கச் சென்ற மாணவி, மர்ம நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். அவரது உடல் முட்புதரில் கண்டெடுக்கப்பட்ட நிலையில், குற்றவாளியைக் கைது செய்யும் வரை உடலைப் பெறப்போவதில்லை எனப் பெற்றோர்களும் கிராம மக்களும் 9 நாட்களுக்கும் மேலாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தச் சூழலில், தொழில்நுட்ப ஆதாரங்கள் மற்றும் சி.சி.டி.வி. காட்சிகள் மூலம் தர்ம முனீஸ்வரன் என்ற முக்கியக் குற்றவாளியைத் தனிப்படை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். குற்றவாளி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மாணவியின் உடலைப் பெற்றுக்கொள்ளப் பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்தனர்.

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த மாணவியின் உடல், இன்று காலை சட்டப்பூர்வ நடைமுறைகளுக்குப் பிறகு அதிகாரிகளால் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. பலத்த பாதுகாப்புடன் மாணவியின் உடல் அவரது சொந்த ஊருக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு இன்று மதியம் இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு உடல் தகனம் செய்யப்படுகிறது.

உச்சபட்ச தண்டனை கோரிக்கை:

குற்றவாளி கைது செய்யப்பட்டிருந்தாலும், அவருக்கு நீதிமன்றம் மூலம் மிகக் குறுகிய காலத்திற்குள் உச்சபட்ச தண்டனையான தூக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என மாணவியின் குடும்பத்தினரும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகின்றனர். கிராமம் முழுவதும் சோகத்தில் மூழ்கியுள்ள நிலையில், அசம்பாவிதங்களைத் தவிர்க்க அந்தப் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.