தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர், கடந்த 11-ம் தேதி அப்பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாகத் டி.எஸ்.பி. சுந்தரபாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார். குற்றவாளிகளை விரைந்து பிடிக்கக் காவல்துறை சார்பில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டது. சந்தேகத்தின் அடிப்படையில் பலரிடம் விசாரணை நடத்தப்பட்டதோடு, வேடநத்தம் கிராமத்தில் வீடு வீடாகவும் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
விசாரணையின் ஒரு பகுதியாக சந்தேகத்திற்குரிய 5 நபர்களிடம் டி.என்.ஏ. பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்தப் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில், சாயல்குடியைச் சேர்ந்த தர்மமுனீஸ்வரன் என்பவர் குற்றவாளி என தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. தற்போது அந்த நபரைப் போலீசார் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த நபர் குறித்தும், கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்தும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.