தூத்துக்குடி,
செல்போன் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் மீண்டும் கோவிலில் 'ரீல்ஸ்' வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிடுவது அதிகரித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தைச் சேர்ந்தவர் தேவி, த.வெ.க. மகளிரணி நிர்வாகியாக உள்ளார். இவர் அப்பகுதியில் அழகுநிலையம் நடத்தி வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது பிறந்த நாளையொட்டி, விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வ ரர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றார்.
அப்போது அவர் கோவிலுக்குள் நுழைவது, பிரகாரம் மற்றும் நவக்கிரக சன்னதியை சுற்றி வருவது போன்றவற்றை செல் போனில் 'ரீல்ஸ்' வீடியோவாக பதிவு செய்து இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதுதொடர்பாக கோவில் செயல் அலுவலரிடம் பக்தர்கள் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து கோவில் செயல் அலுவலர் உமா மகேஸ்வரி, விளாத்திகுளம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோன்று கடந்த சில நாட்களுக்கு முன்பு விளாத்திகுளத்தைச் சேர்ந்த மற்றொரு இளம்பெண் ஒருவரும் தனது பிறந்த நாளையொட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு சென்று 'ரீல்ஸ்' வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாகவும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.