தூத்துக்குடி,
திருச்செந்தூர் அருகே உள்ள தேரிக்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் மதிபால் (வயது 56). விவசாயியான இவர் காயாமொழியில் உள்ள 86 செண்ட் நிலத்தில் தென்னை மற்றும் எலுமிச்சை சாகுபடி செய்து வருகிறார். இதில் அரசு மானியம் மூலம் சொட்டுநீர் பாசனம் அமைப்பதற்கு சிறு, குறு விவசாய சான்றிதழை ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பெற்றார்.
ஆனால் நில அடங்கல் சான்றில் கையெழுத்திட்டு வழங்குவதற்கு மதிபாலிடம், கிராம நிர்வாக அலுவலர் தனசேகர் ரூ.2,500 லஞ்சமாக கேட்டதாக கூறப்படுகிறது. லஞ்சம் கொடுக்க விரும்பாத மதிபால் இதுகுறித்து தூத்துக்குடி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். உடனடியாக போலீசார் ரசாயன பவுடர் தடவிய ரூ.2,500-ஐ மதிபாலிடம் வழங்கி, அதை தனசேகரிடம் கொடுக்கும்படி கூறினர்.
அதன்படி நேற்று பகலில் கிராம நிர்வாக அலுவலகத்தில் இருந்த தனசேகரிடம் பணத்தை மதிபால் கொடுத்தார். அதை அவர் வாங்கியபோது, அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கிராம நிர்வாக அலுவலர் தனசேகரை கையும், களவுமாக பிடித்து அதிரடியாக கைது செய்தனர்.