தமிழக செய்திகள்

2.5 கோடி டன் சரக்குகளைக் கையாண்டு தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் புதிய சாதனை

வ.உ.சிதம்பரனார் துறைமுகம் நிலக்கரி கையாளுதலில் கடந்த நிதி ஆண்டு 9,217.90 டன்னிலிருந்து இந்த நிதி ஆண்டு 10,459.94 டன்னாக உயர்ந்து 13.47 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் 2026-27 நிதியாண்டில் அக்டோபர் 24-ம் தேதிக்குள் 2.5 கோடி டன் சரக்குகளைக் கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது.

2.5 கோடி டன் சரக்குகளைக் கையாண்டு தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் புதிய சாதனை

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் 2026-27-ம் நிதியாண்டில் அக்டோபர் 24-ம் தேதிக்குள் 2.5 கோடி டன் சரக்குகளைக் கையாண்டு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும் சரக்குக் கையாளுதலில் 3.01 சதவீதம் வளர்ச்சியும், கொள்கலன் போக்குவரத்தில் 1.76 சதவீதம் வளர்ச்சியும் பதிவாகியுள்ளது.

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் 2026-27-ம் நிதியாண்டின் அக்டோபர் மாதம் வரையிலான காலகட்டத்தில் சரக்குக் கையாளுதல் மற்றும் கொள்கலன் போக்குவரத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியையும் பல வரலாற்றுச் சாதனைகளையும் பதிவு செய்துள்ளது.

கடந்த ஆண்டைவிட 3.01 சதவீதம் வளர்ச்சி

நடப்பு 2026-27-ம் நிதியாண்டில் (அக்டோபர் வரை), வ.உ.சிதம்பரனார் துறைமுகம் 2.518 கோடி டன் (2 கோடியே 51 லட்சத்து 8 ஆயிரம் டன்) சரக்குகளைக் கையாண்டுள்ளது. கடந்த 2025-26-ம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் கையாளப்பட்ட 2.444 கோடி டன் (2 கோடியே 44 லட்சத்து 40 ஆயிரம் டன்) சரக்குகளுடன் ஒப்பிடுகையில், இது 3.01 சதவீதம் வளர்ச்சியாகும்.

நிலக்கரி கையாளுதலில் 13.47 சதவீதம் வளர்ச்சி

கொள்கலன் போக்குவரத்தில் (TEU) 4.94 லட்சம் TEU-களில் இருந்து 5.02 லட்சம் TEU-களாக அதிகரித்து 1.76 சதவீதம் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. நிலக்கரி கையாளுதலில் 9,217.90 டன்னிலிருந்து 10,459.94 டன்னாக உயர்ந்து 13.47 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது.

உரம் கையாளுதலில் 5.70 லட்சம் டன்னாக அதிகரிப்பு

உரம் கையாளுதலில் கடந்த நிதியாண்டில் 2.33 லட்சம் டன்னாக இருந்த உரம் கையாளுதல், நடப்பு நிதியாண்டில் 5.70 லட்சம் டன்னாகப் பெருமளவு அதிகரித்துள்ளது.

மிக நீண்ட கப்பலைக் கையாண்டு சாதனை

கடந்த செப்டம்பர் 5, 2026 அன்று ஒரே நாளில் 2.17 லட்சம் டன் சரக்குகளைக் கையாண்டு துறைமுகம் புதிய சாதனை படைத்தது (முந்தைய உச்சம்: 2.16 லட்சம் டன்). 335.23 மீட்டர் நீளம் கொண்ட 'M.V. CMA CGM THORIUM' என்ற கப்பலைக் கையாண்டதன் மூலம், துறைமுக வரலாற்றிலேயே மிக நீண்ட கப்பலைக் கையாண்ட சாதனையைப் பதிவு செய்தது.

24 மணி நேரத்தில் 43,052 டன் நிலக்கரி இறக்குமதி

செப்டம்பர் 2026-ல், தூத்துக்குடி சர்வதேச கொள்கலன் முனையம் (TICT) 32 கப்பல்கள் மூலம் 33,771 TEU கொள்கலன்களைக் கையாண்டு வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. JSW தூத்துக்குடி பல்நோக்கு முனையம் 24 மணி நேரத்தில் 43,052 டன் நிலக்கரியை இறக்குமதி செய்து புதிய சாதனை படைத்தது.

செப்டம்பர் 29 அன்று ஒரே நாளில் FACT, KRIBHCO மற்றும் IPL ஆகிய நிறுவனங்களுக்காக 8,061 டன் உரங்களை ரெயில் மூலம் அனுப்பி சாதனை படைக்கப்பட்டது. மேலும் 'ராஜா ஏஜென்சீஸ்' நிறுவனம் 100 ரெயில் பெட்டிகள் மூலம் 6,376.9 டன் உரங்களை பல்வேறு இடங்களுக்கு அனுப்பி தனிநபர் நிறுவன அளவிலான சாதனையைப் பதிவு செய்தது.

வ.உ.சி. துறைமுக ஆணையத் தலைவர் கூறியதாவது:

இந்த சாதனை குறித்து வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத் தலைவர் சுசாந்த குமார் புரோஹித் கூறியபோது, "சரக்குக் கையாளுதலில் எட்டப்பட்டுள்ள இந்த வளர்ச்சி துறைமுகப் பயனாளர்கள், கப்பல் நிறுவனங்கள், முனைய இயக்குநர்கள், வர்த்தகக் கூட்டாளர்கள் மற்றும் ஊழியர்களின் ஒருங்கிணைந்த அர்ப்பணிப்பை பிரதிபலிக்கும் சான்றாகும்.

2026-27-ம் நிதியாண்டில் 2.5 கோடி டன் இலக்கைக் கடந்துள்ளது ஒரு முக்கிய மைல் கல்லாகும். இனிவரும் காலங்களிலும் துறைமுகத்தின் உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல், ரெயில் மற்றும் கடல்வழிப் போக்குவரத்து இணைப்புகளை மேம்படுத்துதல் ஆகியவற்றில் தொடர்ந்து கவனம் செலுத்தி இந்தியாவின் கடல்சார் வர்த்தக வளர்ச்சிக்கு வ.உ.சி. துறைமுகம் தொடர்ந்து பங்காற்றும்" என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT