தமிழக செய்திகள்

முந்தைய ஆட்சியில் இன்னலுற்ற மக்கள் இன்றும் அதே துயரக் கடலில்தான் மூழ்கியுள்ளனர்; நயினார் நாகேந்திரன்

தமிழக மக்களைத் தொடர்ந்து ஏமாற்றிவிட முடியாது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

முந்தைய ஆட்சியில் இன்னலுற்ற மக்கள் இன்றும் அதே துயரக் கடலில்தான் மூழ்கியுள்ளனர் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

நயினார் நாகேந்திரன் பதிவு

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்

சொல்லொன்று செயலொன்று: தவெக அரசின் வெற்று விளம்பர அரசியலும் முரண்பாடுகளும்!

திருச்சியில் தவெக தலைவர் திரு. ஜோசப் விஜய் ஆற்றிய உரை, வெற்றுரை நயமும் போலிகவர்ச்சியும் நிறைந்த விளம்பர உத்தியாகவே அமைந்துள்ளது; இது கடந்த காலத்தீமைகளின் தொடர்ச்சியே அன்றி வேறில்லை. முந்தைய ஆட்சியில் இன்னலுற்ற மக்கள்,இன்றும் அதே துயரக் கடலில்தான் மூழ்கியுள்ளனர்.

எடுத்துக்காட்டாக, விவசாயக் கடன்களை ரத்து செய்து விட்டதாக மார்தட்டுகிறார் முதல்வர் விஜய்.ஆனால் கூட்டுறவு வங்கிகளில் 5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்துள்ள உழவர்களின் கடன்கள் அனைத்தும் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என்ற வாக்குறுதி, தற்போது வெறும் 50,000 ரூபாய்க்கு கீழ் உள்ள கடன்களுக்கு மட்டுமே எனச் சுருக்கப்பட்டு, 'உழுவார் உலகத்தார்க்கு ஆணி' எனப் போற்றப்படும் உழவர் பெருமக்களுக்குப் பெரும் துரோகம் இழைக்கப்பட்டுள்ளது.

மறுபுறம், மதச்சார்பின்மையில் சமரசம் இல்லை என மேடையில் அறமுழக்கம் இடும் முதல்வர், சனாதனத்தை ஒழிப்பதே தங்களின் நோக்கம் என முழங்கும் அவரது கட்சி சட்டமன்ற உறுப்பினர் முஸ்தபாவின் முரண்பட்ட பேச்சை அமைதியாகக் கடப்பது வெற்று வேடத்தையே காட்டுகிறது.

மேலும், தமிழகத்தில் நாளும் பெருகிவரும் சட்டம்-ஒழுங்குச் சீர்கேடுகளுக்குத் தன் மீது பழி போடுவதாக முதல்வர் அங்கலாய்ப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. அமைதி காக்கும் அரும்பெரும் காவல்துறையைத் தன் வசமே வைத்திருக்கும் ஆட்சியாளர், தன் தவறை உணர்ந்து பொறுப்பேற்க மறுத்து, அமைதியை நிலைநாட்ட மேலும் கால அவகாசம் கேட்பது கடமையிலிருந்து தட்டிக்கழிக்கும் வெற்றுச் சாக்குப்போக்கேயாகும்.

சொல்லொன்று, செயலொன்று எனத் திகழும் இத்தகைய போலித்தனமான வார்த்தை ஜாலங்களால் விழிப்புணர்வு மிக்க தமிழக மக்களைத் தொடர்ந்து ஏமாற்றிவிட முடியாது என்பது மட்டும் திண்ணம்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.