தமிழக செய்திகள்

விசில் சின்னம் பொறித்த ஆயிரக்கணக்கான தட்டுகள், குக்கர்கள் பறிமுதல்: த.வெ.க. நிர்வாகிக்கு போலீஸ் வலைவீச்சு

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி பகுதியில் த.வெ.க. நிர்வாகி ஒருவரின் வீட்டில் பரிசுப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக திருச்செந்தூர் தொகுதி பறக்கும் படை அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி திசைகாவல் தெருவில் உள்ள ஒரு வீட்டில் பெருமளவிலான பரிசுப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகத் திருச்செந்தூர் தொகுதி பறக்கும் படை அலுவலர் வைரவேலுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வள்ளிநாயகம் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் நேற்று மதியம் அந்த வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.

சோதனையின்போது அந்த வீட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் 'விசில்' சின்னம் பொறிக்கப்பட்ட 3,926 எவர்சில்வர் தட்டுகள் மற்றும் 16 குக்கர்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றின் மொத்த மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. விசாரணையில் அந்த வீட்டின் உரிமையாளர் த.வெ.க. மாவட்ட செயற்குழு உறுப்பினர் பொன்இசக்கி என்பது தெரியவந்தது. அதிகாரிகள் சோதனையிட வந்ததை அறிந்த அவர் அங்கிருந்து தலைமறைவாகிவிட்டார்.

பறிமுதல் செய்யப்பட்ட தட்டுகள் மற்றும் குக்கர்களை அதிகாரிகள் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பாகப் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான பொன்இசக்கியை தீவிரமாக தேடி வருகின்றனர். தேர்தல் நேரத்தில் கட்சியின் சின்னம் பொறித்த பொருட்கள் இவ்வளவு பெரிய அளவில் பிடிபட்டது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.