தமிழக செய்திகள்

சொந்தக் கட்சி தொண்டர்களையே பவுன்சர்களை கொண்டு அச்சுறுத்துவதா? - நயினார் நாகேந்திரன் கண்டனம்

ஓர் அரசியல் கட்சி என்பது தொண்டர்களின் உழைப்பாலும் தியாகத்தாலும் மட்டுமே கட்டமைக்கப்பட முடியும்.

சென்னை,

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

பொன்னேரியில் நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினர் அலுவலக திறப்பு விழாவின்போது, அதில் கலந்து கொண்ட தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை பவுன்சர்கள் என்ற பெயரில் சிலர் அடாவடித்தனம் செய்து, தாக்க முற்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.

பவுன்சர் கலாசாரம்

ஓர் அரசியல் கட்சி என்பது தொண்டர்களின் உழைப்பாலும் தியாகத்தாலும் மட்டுமே கட்டமைக்கப்பட முடியும். ஆனால் சினிமா பாணி பவுன்சர் கலாசாரத்தை கொண்டு வந்து, சொந்தக் கட்சியினரையே மதிக்காமல் அவர்களை தாக்கும் செயலில் ஈடுபடுவது அப்பட்டமான ரவுடித்தனமாகும்.

"நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் தமிழக மக்களுக்கு பாதுகாப்பு அளிப்போம்" என்று மார்தட்டிய தவெக, தன் சொந்த தொண்டர்களுக்கே பாதுகாப்பு வளையம் என்ற பெயரில் அச்சுறுத்தலை ஏற்படுத்துவது கண்டிக்கத்தக்கது. ஜனநாயக வழியில் அரசியல் செய்வதாக கூறிக்கொள்ளும் தவெக தலைவர் விஜய் அவர்கள், இனியாவது தன் கட்சியினரை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.