தமிழக செய்திகள்

ஜெம் கிரானைட் வீரமணி மீது இதுவரை 3 வழக்குகள் பதிவு

தொழில் அதிபர் வீரமணி மீதும், அவரோடு கைது செய்யப்பட்டுள்ளவர்கள் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

சென்னை,

ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி இதுவரை 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறப்பு புலனாய்வு படை

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த புகார் அடிப்படையில் 2 வழக்குகளில் சிக்கி தொழில் அதிபர் வீரமணி தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு உடந்தையாக இருந்ததாக சாந்தி என்பவரும், அவரது கணவர் மகேந்திர சிம்ஹன், வீரமணியின் உதவியாளர் கணேசன் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கை முதலில் சென்னை விபசார தடுப்புப்பிரிவு போலீசார் விசாரித்து வந்தனர். தற்போது இந்த வழக்கை கூடுதல் கமிஷனர் தேன்மொழி தலைமையிலான சிறப்பு புலனாய்வு படை விசாரித்து வருகிறது. ஏற்கனவே 2 வழக்குகளில் சிக்கி உள்ள வீரமணி மீது, தற்போது 3-வது வழக்கு ஒன்றும் பாய்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

16 வயது சிறுமி

வீரமணி, தான் பணம் செலவழித்து படிக்க வைக்கும் சிறுமிகளை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். அந்தவகையில் வீரமணியிடம் கல்வி உதவித் தொகை பெற்ற சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி வீரமணியின் பாலியல் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டதாக சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் வீரமணி மீது புதிதாக ஒரு போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது.

காரில் வைத்து பலாத்காரம்

இந்தநிலையில், வீரமணியால் படிக்க வைக்கப்பட்டு பாலியல் ரீதியாக சீரழிக்கப்பட்ட மேலும் ஒரு சிறுமியின் தாயார் பரபரப்பு புகார் கொடுத்துள்ளார். அதுதொடர்பாகவும், வீரமணி மீது 3-வது வழக்கு பாய்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது புகார் கூறிய சிறுமியை தனது சொகுசு காரில் வைத்து அவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகாரில் கூறப்பட்டுள்ளது.

குண்டர் சட்டம்

தொடர்ந்து அடுத்தடுத்து பாலியல் வழக்குகளில் சிக்கி வரும் தொழில் அதிபர் வீரமணி மீதும், அவரோடு கைது செய்யப்பட்டுள்ள சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்ஹன் ஆகியோர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

அதற்கான ஏற்பாடுகளை சிறப்பு புலனாய்வு படை போலீசார் செய்து வருவதாகவும் தெரிகிறது. வீரமணி மீது வழக்கு போடாமல் இருக்க கோடிக்கணக்கில் பணம் வாங்கிய குற்றச்சாட்டுக்கள் குறித்தும் தனியாக விசாரணை நடந்து வருகிறது. அதுதொடர்பாக ஏற்கனவே காங்கிரஸ் பிரமுகர் ரஞ்சன்குமாரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதையொட்டி மேலும் சில அரசியல் பிரமுகர்களிடம் விசாரணை நடத்தவும் சிறப்பு புலனாய்வு படை போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

இதுவரை 3 வழக்குகள் பதிவு

சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் முதல் வழக்கு. 2004இல் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சிறுமியை தற்கொலைக்கு தூண்டியதாக, சிறுமியின் தாய் அளித்த புகாரில் மற்றொரு வழக்கு; மற்றொரு சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக தனியாக ஒரு போக்சோ வழக்கு என 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒருவாரத்திற்குள் நீதிமன்றத்தில் முதற்கட்ட குற்றப்பத்திரிகையை எஸ்.ஐ.டி. அளிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

SCROLL FOR NEXT