சென்னை,
தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
மத்திய அரசே,
கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்று!
மும்மொழிக் கொள்கை மோசடிக் கொள்கை!
தமிழகத்தில் கல்வி, மொழி, மாநில உரிமைகள் ஆகியவை ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்த முக்கியமான அடிப்படை உரிமைகள் ஆகும். இந்நிலையில், மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள பி.எம். ஸ்ரீ (PM SHRI) திட்டத்தை நாம் மிகுந்த கவனத்துடனும் அரசியல் விழிப்புணர்வுடனும் ஆய்வு செய்கிறோம்.
இந்த திட்டத்தின் கீழ் முன்வைக்கப்படும் கல்வி மாற்றங்களில் வெளிப்படையாகக் காணப்படாத சில ஆழமானப் பாதிப்புகள் உள்ளன. குறிப்பாக, மும்மொழிக் கொள்கையை அடிப்படையாகக் கொண்ட புதிய கல்வி நடைமுறைகள், வருங்காலத்தில் இந்தி திணிப்பிற்கு வழிவகுக்கும் அபாயத்தை உருவாக்குகின்றன.
தமிழ்நாடு பல தசாப்தங்களாகப் பின்பற்றிவரும் இருமொழிக் கொள்கை (தமிழ் + ஆங்கிலம்) என்பது மொழி அடையாளத்தையும், கல்வி சமத்துவத்தையும் பாதுகாக்கும் முக்கியக் கொள்கையாகும். இதற்கு முரணாக மும்மொழிக் கொள்கையை திணிப்பது, தமிழக மக்களின் உணர்வுகளுக்கும் வரலாற்றுப் போராட்டங்களுக்கும் எதிரானதாகும்.
மேலும், கல்வி என்பது அரசியலமைப்பின் அடிப்படையில் மாநிலங்களின் உரிமை சார்ந்த துறை ஆகும். மாநிலங்களின் தேவைகள், மொழி, சமூக அமைப்பு, பொருளாதார நிலை போன்றவற்றை கருத்தில் கொண்டு கல்விக் கொள்கைகள் வடிவமைக்கப்பட வேண்டும். ஆனால், மத்திய அரசு விதிக்கும் ஒரே மாதிரியான கல்விக் கட்டுப்பாடுகள், மாநிலங்களின் சுயாட்சியைக் குறைக்கும் முயற்சியாகவே பார்க்கப்படுகின்றன.
அதனால், கல்வியை மீண்டும் மாநில பட்டியலில் முழுமையாகக் கொண்டுவர வேண்டும் என்பது தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வலியுறுத்தலாகும். மாநில அரசுகளே கல்வித் துறையில் முழு அதிகாரத்துடன் செயல்பட வேண்டும். அதனை உறுதி செய்வது அவசியம். இதுவே கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படை.
இதனுடன், தற்போது மத்திய அரசு தமிழ்நாடு அரசுக்கு விதித்துள்ள காலக்கெடு மற்றும் அழுத்த நடைமுறைகளை, தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. சனநாயக அமைப்பில், மாநிலங்களின் விருப்பம் மற்றும் உரிமைகள் மதிக்கப்பட வேண்டியது கட்டாயம்.
தமிழ்நாட்டில் புதிதாக அமைய உள்ள அரசு இதை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்றும், தமிழகத்தின் உரிமைகளைக் காக்கும் விதமாக, அனைத்துக் கட்சிகளும் எதிர்ப்பைப் பதிவு செய்ய வேண்டும் என்றும், தேவைப்பட்டால் மிகப்பெரிய அளவில் வலுவானப் போராட்டங்களை அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் திரண்டு முன்னெடுக்க வேண்டும் என்றும், தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது.
தமிழ் மொழி, மாநில உரிமை, கல்வியில் சுயாட்சி ஆகியவற்றைப் பாதுகாப்பது தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் அடிப்படை நிலைப்பாடாகும். தமிழக மக்களின் உரிமைகளுக்கு எதிரான எந்த முயற்சியையும் எதிர்த்து, சனநாயக வழியில் தொடர்ந்துப் போராடுவோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.