சென்னை,
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
சிபிஎஸ்இ பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் மூன்று மொழிகள் கட்டாயம் என்றும், அதில் இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் என்றும் சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு குறுகிய காலத்திலேயே புதிய மொழியை கட்டாயப்படுத்துவது மாணவர்களின் கல்விச் சுமையையும், மன அழுத்தத்தையும் அதிகரிக்கும் ஆபத்தைக் கொண்டுள்ளது.
ஏற்கனவே தமிழகத்தில் பல ஆண்டுகளாக இருமொழிக் கொள்கை நடைமுறையில் இருந்து வருகிறது. தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளின் மூலம் தமிழக மாணவர்கள் கல்வி, வேலைவாய்ப்பு, உயர்கல்வி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கி வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தின் தனித்துவமான மொழிக் கொள்கையை புறக்கணித்து மூன்றாவது மொழியை திணிக்க முயற்சிப்பது மாநில உரிமைகளில் தலையிடுவதாகும்.
ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், 9-ம் வகுப்பிற்கு மூன்றாவது மொழி, மூன்று ஆண்டுகளில் கட்டாயமாக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், அதனை மே 15-ம் தேதி திருத்தி, இந்த கல்வியாண்டிலிருந்தே அமல்படுத்தப்படும் என்று அறிவித்திருப்பது மாணவர்கள், பெற்றோர் மற்றும் கல்வியாளர்களிடையே பெரும் குழப்பத்தையும் எதிர்ப்பையும் உருவாக்கியுள்ளது.
தமிழகத்தில் ஏற்கனவே 6-ம் வகுப்பு முதல் மாணவர்கள் விருப்ப மொழிகளை கற்று வருகின்றனர். அந்த நிலையை மாற்றி, இரண்டு இந்திய மொழிகள் கட்டாயம் என்ற புதிய நிபந்தனையை கொண்டு வருவது ஏற்புடையதல்ல.இந்தியாவில் உள்ள 22 மொழிகளில் ஏதேனும் இரண்டு மொழிகளை கட்டாயப்படுத்துவது நடைமுறைக்கு சாத்தியமற்றதுடன், மாணவர்களின் கல்வி சுதந்திரத்தையும் பாதிக்கும்.
மொழி என்பது கற்றலின் கருவி மட்டுமல்ல; அது ஒரு இனத்தின் அடையாளமும், பண்பாட்டின் வெளிப்பாடும் ஆகும். அதனால் மொழிக் கொள்கை என்பது மக்களின் விருப்பத்தையும், மாநிலங்களின் தனித்துவத்தையும் மதித்து அமல்படுத்தப்பட வேண்டும். ஒரே மாதிரியான கல்விக் கொள்கையை நாடு முழுவதும் திணிப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானதாகும்.
குறிப்பாக, தமிழக மாணவர்களுக்கு தேவையற்ற கல்விச் சுமையை ஏற்படுத்தும் வகையில் மூன்று மொழிக் கொள்கையை திணிப்பது மாணவர்களின் மனநலத்தையும் கல்வித் தரத்தையும் பாதிக்கும். புதிய மொழியை திடீரென கற்க வேண்டிய சூழல் உருவானால், அது கிராமப்புற மற்றும் சாதாரண குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு கூடுதல் சிரமத்தை ஏற்படுத்தும்.
எனவே, சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பை மத்திய கல்வி அமைச்சகம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும். தமிழகத்தின் இருமொழிக் கொள்கையை மதித்து, மாநில மக்களின் உணர்வுகளையும் கல்வி உரிமையையும் பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் மூன்றுமொழிக் கொள்கையை திணிக்கும் எந்த முயற்சியையும் பாட்டாளி மக்கள் கட்சி கடுமையாக எதிர்க்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.