தமிழக செய்திகள்

தனியாக நடந்து சென்ற இளம்பெண்களுக்கு பாலியல் தொல்லை: நேபாளிகள் 3 பேர் கைது

சென்னை புரசைவாக்கம் பகுதியில் உள்ள மருந்து கடைக்கு மருந்து வாங்குவதற்கு தனியாக சென்ற 2 இளம்பெண்களை வழிமறித்து 3 பேர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.

சென்னை,

சென்னை புரசைவாக்கம், வெள்ளாளர் தெருவில் உள்ள மருந்து கடைக்கு மருந்து வாங்குவதற்காக நேற்று முன்தினம் இரவு 2 இளம்பெண்கள் தனியாக சென்றனர். அவர்கள் இருவரும் புரசைவாக்கம் பகுதியை சேர்ந்தவர்கள். அவர்களை வழிமறித்து 3 பேர் பாலியல் தொல்லையில் ஈடுபட்டனர். அவர்களது தொல்லை தாங்க முடியாமல் இளம்பெண்கள் கூச்சல் போட்டனர்.

நேபாள நாட்டை சேர்ந்த 3 பேர் கைது:

இதை கேட்டு அந்த வழியாக வந்த ஆட்டோ டிரைவர் பாபு என்பவர் 3 பேரையும் பொதுமக்கள் உதவியோடு மடக்கிபிடித்தார். அவர்கள் 3 பேரும் கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் 3 பேரும் நேபாளம் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது.

கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் ஊழியர்களாக வேலை பார்த்தனர். வேலை முடிந்து சென்ற அவர்கள் மது அருந்திவிட்டு இளம்பெண்களிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஷாகில் கைனி (வயது 22) மற்றும் 17 வயதுக்கு உட்பட்ட 2 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.