தமிழக செய்திகள்

மயிலாடுதுறையில் பயங்கர சத்தத்துடன் வீட்டில் விழுந்த இடி!

வீடுகளில் இருந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்துள்ளன.

மயிலாடுதுறை,

நேற்று இரவு பெய்த கனமழையில் பயங்கர சத்தத்துடன் கூடிய இடி வீட்டின் வாசலில் விழுந்து தூண்கள் மற்றும் மின்சாதன பொருட்கள் சேதமடைந்துள்ளது.

இடியின் தாக்கம்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா அருகே பெருஞ்சேரி பகுதியில் வசித்து வருபவர் பார்த்தசாரதி. இவர் மின்வாரியத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்த நிலையில், நேற்று நள்ளிரவு சுமார் 11.30 மணியளவில் பார்த்தசாரதியின் வீட்டின் வாசல் பகுதியில் பயங்கர சத்தத்துடன் இடி விழுந்தது. இதன் தாக்கத்தால், அவரது வீட்டில் இருந்த மின்சார சர்வீஸ் லைனின் இரும்பு கம்பி இரண்டு துண்டுகளாக உடைந்து கீழே விழுந்தது

மேலும், வீட்டின் வாசலில் இருந்த கான்கிரீட் தூண் பெயர்ந்து நாலாபுறமும் சிதறியது. இந்த இடியின் வீரியம் பார்த்தசாரதியின் வீட்டை மட்டுமன்றி, அவருக்கு எதிர் வரிசையில் உள்ள வீடுகளையும் பதம் பார்த்துள்ளது. இடி தாக்கிய வேகத்தில் எதிரே உள்ள வீட்டின் சுவர்களில் பலத்த விரிசல்கள் ஏற்பட்டுள்ளன.

ரூ.5 லட்சம் மதிப்பு பொருட்கள் சேதம்

இந்த திடீர் இடி விபத்தினால், பார்த்தசாரதியின் வீட்டில் இருந்த மின்சார மீட்டர் பாக்ஸ், எல்.இ.டி தொலைக்காட்சி, ஏசி , வாஷிங் மெஷின் மற்றும் மின்விசிறிகள் உள்ளிட்ட அனைத்து மின்சாதனப் பொருட்களும், வீட்டிற்கான சர்வீஸ் வயரிங் அமைப்புகளும் முற்றிலுமாக கருகி சேதமடைந்தன.

இதேபோல், அந்த வடக்கு வீதியில் உள்ள மற்ற சில வீடுகளிலும் மின்சாதனப் பொருட்கள் பெருமளவில் பழுதடைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் ஒட்டுமொத்தமாக ரூ.5 லட்சத்திற்கும் அதிகமான மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர்.

கோரிக்கை

நள்ளிரவில் நேர்ந்த இந்த இடி விபத்தால் பெருஞ்சேரி கிராம மக்கள் பெரும் அதிர்ச்சியிலும் அச்சத்திலும் ஆழ்ந்துள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளும், வருவாய்த்துறையினரும் உடனடியாக சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு நடத்த வேண்டும் என்றும், இடி விழுந்து வாழ்வாதாரப் பொருட்களை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT