சென்னை,
கூடலூர் வனப்பிரிவில் கடந்த 28 நாட்களாக தேடப்பட்டு வந்த ஆண் புலி, சில்வர் கிளவுட் தேயிலைத் தோட்டப் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை வனத்துறையினர் அமைத்திருந்த கூண்டில் சிக்கியது. வனத்துறையினர் நடத்திய ஆய்வில், கூடலூர் பகுதியில் இருவர் உயிரிழந்த சம்பவத்தில் தொடர்புடைய புலி இது என்பது உறுதி செய்யப்பட்டது.
புலியைப் பிடிக்கும் நடவடிக்கையில் 200-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் ஈடுபட்டனர். மேலும், கும்கி யானைகள், கேமரா பொறிகள், ஆளில்லா விமானங்கள் மற்றும் கூண்டுகள் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டு புலியைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது.
கூண்டில் சிக்கிய புலி, முதலில் மருத்துவப் பரிசோதனைக்காக முதுமலை புலிகள் காப்பகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு புலியின் உடல்நிலை குறித்து மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
பின்னர், அந்த ஆண் புலி பாதுகாப்பாக சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டு, பூங்கா நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
பூங்கா நிர்வாகத்தின் செய்திக் குறிப்பின்படி, சுமார் 10 வயதுடைய இந்த ஆண் புலி தற்போது சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் உள்ளது.
வனவிலங்கு மருத்துவர்கள் மற்றும் விலங்கு பராமரிப்புக் குழுவினர் புலியின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.