தமிழக செய்திகள்

செங்கோட்டை அருகே ரெயில் மோதி புலி உயிரிழப்பு: வனத்துறையினர் விசாரணை

தென்காசி மாவட்டம், செங்கோட்டை ரெயில் நிலையம் அருகே ரெயிலில் அடிபட்டு புலி ஒன்று இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி,

தென்காசி மாவட்டம், செங்கோட்டை ரெயில் நிலையம் அருகே ரெயிலில் அடிபட்டு புலி ஒன்று உயிரிழந்தது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வனவிலங்குகள் நடமாட்டம்; பொதுமக்கள் அச்சம்

தென்காசி மாவட்டமானது மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ளது. அங்குள்ள மலைப் பகுதியில் யானை, சிறுத்தைப்புலி, புலி, காட்டெருமை, காட்டுப்பன்றி உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இதில் சில வனவிலங்குகள் விவசாய குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து சேதங்களை ஏற்படுத்தி வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு வடகரை பகுதியில் ஒரு சிறுத்தைப்புலி பசுமாட்டை கொன்று இழுத்துச் சென்றது. இதனால் அப்பகுதி மக்களும், விவசாயிகளும் அச்சத்தில் உள்ளனர்.

ரெயில் மோதி புலி உயிரிழப்பு; வனத்துறையினர் விசாரணை

இந்த நிலையில் நேற்று அதிகாலையில் பாலக்காட்டில் இருந்து தூத்துக்குடிக்கு செல்லக்கூடிய பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயிலில், பகவதிபுரம் செங்கோட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள பூலாங்குடியிருப்பு பகுதியில் ஒரு விவசாயி நிலப்பகுதியில் இருந்து ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது அடிபட்டு புலி ஒன்று இறந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட வனஅலுவலர் ராஜ்மோகன் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று புலி எப்படி இறந்தது என்று ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வனத்துறையினர் அறிவுறுத்தல்

பகவதிபுரம் பகுதியில் ஏற்கெனவே சிறுத்தைப் புலி நடமாட்டம் இருந்து வருவதாகவும், அவற்றின் கால்தடங்கள் இருப்பதாகவும் ஆடு மற்றும் மாடு மேய்க்கச் செல்பவர்கள் அந்த கால்நடைகளை அச்சுறுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தற்போது ஊருக்கு அருகே ரெயிலில் அடிபட்டு புலி இறந்துள்ள சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. இதைத் தொடர்ந்து மாடு மேய்க்கச் செல்பவர்கள் மற்றும் பொதுமக்கள் கவனமுடன் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

SCROLL FOR NEXT